உளுந்தூர்பேட்டையில் கொள்ளைபோன சிலைகள் மீட்பு: ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 3 சாமி சிலைகள் ஒப்படைப்பு
மீட்கப்பட்ட 3 சாமி சிலைகள் உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஒப்படைக்கப்பட்டது.
உளுந்தூர்பேட்டை,
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கடந்த 2011-ம் ஆண்டு 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதிகேசவப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய மூன்று ஐம்பொன் சிலைகள் கொள்ளை போனது. இதுகுறித்து கோவில் பூசாரி கொடுத்த புகாரின்பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையே இந்த வழக்கு தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸ் டிஜி.பி. ஜெயந்த்முரளி தலைமையிலான போலீசார் கொள்ளை போன சிலைகளின் புகைப்படங்களை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கொள்ளை போன ரூ.5 கோடி மதிப்பிலான 3 சிலைகளும் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் சாலை முதல் குறுக்கு தெருவை சேர்ந்த ஷோபா துரைராஜன் என்பவர் வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று வீட்டில் இருந்த 3 ஐம்பொன் சிலைகளை மீட்டனர். இதையடுத்து மீட்கப்பட்ட 3 சிலைகளை தமிழக சிலை கடத்தல் பிரிவு போலீசார் நேற்று உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். அதன்பிறகு சாமி சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அப்போது சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி. தினகரன், போலீஸ் சூப்பிரண்டு ரவி, கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன், உளுந்தூர்பேட்டை நகராட்சி தலைவர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் வைத்தியநாதன் உட்பட பலர் உடன் இருந்தனர்.