கல்லூரி விடுதியில் தூக்குப்போட்டு மாணவர் தற்கொலை


கல்லூரி விடுதியில் தூக்குப்போட்டு மாணவர் தற்கொலை
x
தினத்தந்தி 30 Jan 2023 12:15 AM IST (Updated: 30 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

களியக்காவிளை அருகே கல்லூரி விடுதி கட்டிடத்தில் தூக்குப்போட்டு மாணவர் தற்கொலை செய்து கொண்டார். சாவதற்கு முன்பு அவர் எழுதி வைத்த உருக்கமான கடிதம் சிக்கியது.

கன்னியாகுமரி

களியக்காவிளை:

களியக்காவிளை அருகே கல்லூரி விடுதி கட்டிடத்தில் தூக்குப்போட்டு மாணவர் தற்கொலை செய்து கொண்டார். சாவதற்கு முன்பு அவர் எழுதி வைத்த உருக்கமான கடிதம் சிக்கியது.

நர்சிங் மாணவர்

களியக்காவிளை அருகே உள்ள குமரி-கேரள எல்லையான படந்தாலுமூட்டில் ஒரு தனியார் நர்சிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் தங்கி படிப்பதற்காக விடுதியும் உள்ளது.

இந்த விடுதியில் தங்கியிருந்தபடி தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஆலம்பள்ளம் பகுதியை சேர்ந்த வீராசாமி மகன் சுமித்ரன் (வயது 20) என்பவர் பி.எஸ்.சி. பாராமெடிக்கல் சயின்ஸ் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

தூக்கில் பிணமாக தொங்கினார்

கடந்த மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி சுமித்ரன் சொந்த ஊருக்கு சென்று விட்டு கல்லூரிக்கு திரும்பினார். ஆனால் அதன் பிறகு அவர் சோர்வாக இருந்துள்ளார். சக மாணவர்களிடமும் சரிவர பேசவில்லை.

இதனால் சந்தேகமடைந்த சக மாணவர்கள் இதுபற்றி அவரிடம் கேட்டுள்ளனர். ஆனாலும் எந்த பதிலும் கூறாமல் மவுனத்தையே பதிலாக தந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு அறையில் தங்கியிருந்த சக மாணவர்களிடம் சுமித்ரன் கழிவறைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். நேற்று காலையில் சக மாணவர்கள் எழுந்து பார்த்த போது சுமித்ரனை அறையில் காணவில்லை. உடனே அவர்கள் விடுதியின் மேல் மாடிக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு கண்ட காட்சி மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது அங்குள்ள இரும்பு கம்பியில் தூக்கில் தொங்கிய நிலையில் சுவரின் வெளிப்புறத்தில் சுமித்ரன் பிணமாக தொங்கினார். மாணவனின் உடலை பார்த்து சக மாணவர்கள் கதறி அழுதனர்.

உருக்கமான கடிதம் சிக்கியது

உடனே இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுபற்றி தகவல் அறிந்த களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவர் சுமித்ரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் ேபாலீசார் இறந்த மாணவனின் விடுதி அறையை சோதனை செய்தனர். அப்போது, மாணவர் சுமித்ரன் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் 'என்னால் பெற்றோருக்கு நல்ல பிள்ளையாக இருக்க முடியவில்லை. என்னால் நன்றாக படிக்கவும் முடியவில்லை. இந்த உலகில் நான் பிறந்ததை பாவமாக கருதுகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை' என எழுதப்பட்டிருந்தது.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்லூரி விடுதியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story