தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை: துக்கம் தாங்காமல் மனைவியும் சுருண்டு விழுந்து இறந்தார்
கீரனூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். துக்கம் தாங்காமல் மனைவி சுருண்டு விழுந்து இறந்தார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே தெற்கு துவரவயல் கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 31). கூலித்தொழிலாளி. இவரது மனைவி வினிதா (22). இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தையும், 4 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் திருநாவுக்கரசு கிரிக்கெட் விளையாடிவிட்டு வீட்டிற்கு மது போதையில் வந்துள்ளார். இதைப்பார்த்த வினிதா அவருடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த திருநாவுக்கரசு வீட்டின் உத்திரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கினார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திருநாவுக்கரசு நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.
மனைவியும் இறந்தார்
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநாவுக்கரசின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்குபின் திருநாவுக்கரசு உடலை நேற்று மாலை ஆம்புலன்ஸ் மூலம் அவரது ஊருக்கு கொண்டு வந்தனர்.
ஆம்புலன்ஸ் வருவதை பார்த்த வினிதா கதறி அழுதபடியே ஓடி வந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி சுருண்டு கீழே விழுந்தார். இதையடுத்து அவரை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கீரனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வினிதா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். வினிதா இறந்த செய்தி கேட்ட அவரது உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களையும் கண்கலங்க வைத்தது.
சோகம்
இதையடுத்து அங்கு வந்த போலீசார் வினிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே இறந்து போன திருநாவுக்கரசின் உடலை அடக்கம் செய்யாமல் சுடுகாட்டிலேயே சில மணி நேரம் வைத்திருந்தனர். பின்னர் போலீசாரின் அறிவுரைப்படி உறவினர்கள் திருநாவுக்கரசின் உடலை அடக்கம் செய்தனர். கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.