அனுமன் ஜெயந்தி விழா


அனுமன் ஜெயந்தி விழா
x
தினத்தந்தி 24 Dec 2022 12:15 AM IST (Updated: 24 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம், தியாகதுருகம் மற்றும் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

ராமபக்த ஆஞ்சநேயர்

சங்கராபுரம் அருகே உள்ள காட்டுவன்னஞ்சூர் ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி ஆஞ்சநேயருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக்கொண்டு அபிஷேகம் செய்து, சந்தனகாப்பு அலங்காரத்துடன் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதே போல் சங்கராபுரம் வாசவாம்பாள் கோவில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர், குளத்தூர் வீரஆஞ்சநேயர், தேவபாண்டலம் மணிதீர்த்த ஆஞ்சநேயர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது.

சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர்

அனுமன் ஜெயந்தியையொட்டி மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அந்த வகையில் ராவத்தநல்லூர் ஸ்ரீ சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று காலை சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கோவில் வளாகத்தில் யாகம் வளர்க்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.இதையடுத்து மதியம் 3 மணி அளவில் சஞ்சீவிராயர் ஆஞ்சநேயகர் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில், வெற்றிலை மற்றும் வடமாலை சாத்தப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ராவத்தநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வீர ஆஞ்சநேயர்

தியாகதுருகம்-திருக்கோவிலூர் சாலையில் ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் அருகே உள்ள ஜெய வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 8 மணியளவில் பால், தயிர், சந்தனம், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சந்தனகாப்பு மற்றும் வெற்றிலை, மலர் மாலைகளால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் தியாகதுருகம் மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story