இன்று நடக்கிறது: நாடார் மகாஜன சங்கத்தேர்தலை நடத்த தடையில்லை- யாரும் பிரச்சினையில் ஈடுபடக்கூடாது என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


இன்று நடக்கிறது: நாடார் மகாஜன சங்கத்தேர்தலை   நடத்த தடையில்லை- யாரும் பிரச்சினையில் ஈடுபடக்கூடாது என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

மதுரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் நாடார் மகாஜன சங்கத்தேர்தலை நடத்த தடையில்லை என்றும், அங்கு யாரும் பிரச்சினையில் ஈடுபடக்கூடாது எனவும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


மதுரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் நாடார் மகாஜன சங்கத்தேர்தலை நடத்த தடையில்லை என்றும், அங்கு யாரும் பிரச்சினையில் ஈடுபடக்கூடாது எனவும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

நாடார் மகாஜன சங்க தேர்தல்

மதுரை தெற்குவாசலைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நாடார் மகாஜன சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன். நாடார் மகாஜன சங்கம், அதற்கு உள்பட்ட வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி பேரவை, காமராஜ் பாலிடெக்னிக் பரிபாலன சபை ஆகிய 3 அமைப்புகளின் நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு முடிந்தது. எனவே அந்த பதவிகளுக்கு தேர்தல் நடத்த பதிவுத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

ஆனால் நாடார் மகாஜன சங்கத்தின் கடந்த 2015-ம் ஆண்டு பொதுக்குழு தீர்மானத்திற்கு எதிராக கீழ்கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் பதிவுத்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.

தேர்தல் நடத்த உத்தரவு

அதன்பேரில் தேர்தல் நடத்துவதற்கு எதிராக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரனை நியமித்து, தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு முறையாக தேர்தல் நடத்தலாம் என 7.4.2022 அன்று உத்தரவிட்டது.

நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பமில்லை. ஆனாலும் நாடார் மகாஜன சங்கத்தில் 75 பதவிகள், எஸ்.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி பேரவையில் 45 பதவிகள், காமராஜ் பாலிடெக்னிக் பரிபாலன சபையில் 45 பதவிகளுக்கான தேர்தல் நடவடிக்கைகளை அறிந்து கொள்ள ஆர்வத்துடன் உள்ளேன்.

இந்த சங்கத்தில் 62,169 வாக்காளர்கள் உள்ளதாகவும், 6-ந்தேதி (அதாவது இன்று) காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை இந்த 3 அமைப்புகளுக்கும் தேர்தல் நடக்கிறது என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விதிகளை பின்பற்றவில்லை

இந்தநிலையில் வாக்காளர் பட்டியல் வெளியிடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் சங்கத்தின் துணை விதிகளை பின்பற்றி தேர்தல் நடைமுறைகள் செயல்படுத்தப்படவில்லை.

எனவே 6-ந்தேதி (அதாவது இன்று) நடக்கும் நாடார் மகாஜன சங்கம் மற்றும் 2 அமைப்புகளின் நிர்வாகிகள் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும். மேலும், தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து, விதிகளை பின்பற்றி புதிய அறிவிப்பை வெளியிட்டு தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு, அவசர மனுவாக நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

தேர்தல் நடத்தலாம்

விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

தேர்தல் கமிஷனர் அறிவிப்பின்படி 6-ந்தேதி (அதாவது இன்று) திட்டமிட்டபடி தேர்தலை நடத்த வேண்டும். தேர்தலில் போட்டியிடும் அனைத்து தரப்பினரும் அமைதியாகவும், சுதந்திரமாகவும் தேர்தலை நடத்த ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

தேர்தல் நடக்கும் வளாகத்தில் தேர்தல் விதிகளுக்கு எதிராக யாரும் எந்தவித பிரச்சினையிலும் ஈடுபடக்கூடாது.

பாதுகாப்பு

இந்த தேர்தலை நேர்மையாக நடத்துவதற்கு வசதியாக தேர்தல் அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பை மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வழங்க வேண்டும். இறுதி உத்தரவுக்காக இந்த வழக்கு வருகிற 7-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story