சென்னிமலையில் நாளை நடக்கிறதுஅய்யப்ப சாமி கோவில் கும்பாபிஷேகம்பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
சென்னிமலையில் உள்ள அய்யப்பசாமி கோவில் கும்பாபிஷேகம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
தீர்த்தக்குட ஊர்வலம்
சென்னிமலையில் காங்கேயம் ரோட்டில் அய்யப்பா நகரில் பழமையான அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள விமானங்கள், கருவறை, மகா மண்டபம் ஆகியவை புனரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இதற்கான கும்பாபிஷேக விழா நேற்று காலை 5.30 மணிக்கு மேல் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. பின்னர் நவக்கிரக ஹோமம், தன பூஜை, கோ பூஜை, தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவையொட்டி பக்தர்கள் கொடிவேரி சென்று தீர்த்தம் கொண்டு வந்தனர். பின்னர் தீர்த்த குடங்களுடன் பக்தர்கள் அறச்சலூர் ரோட்டில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு 4 ராஜ வீதிகள் வழியாக வலம் வந்து அய்யப்பா நகரில் உள்ள கோவிலுக்கு சென்றனர். அங்கு மாலை 5 மணிக்கு மேல் விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கோபுர கலசங்கள் வைத்தல், முதல் கால யாக பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கும்பாபிஷேகம்
இன்று (வியாழக்கிழமை) காலை 8.30 மணிக்கு மேல் 2-ம் கால யாக பூஜையுடன் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. மாலை 5 மணிக்கு மேல் 3-ம் கால யாக பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கி பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
நாளை (வெள்ளிக்கிழமை) காலை 5.30 மணிக்கு மேல் 4-ம் கால யாக பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கி நாடி சந்தானம், மகா தீபாராதனை, கலசங்கள் ஆலயம் வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் நடக்கிறது. பொதுமக்கள் முன்னிலையில் முருகனடிமை சுப்புசாமி தலைமையில் காலை 8.30 மணிக்கு மேல் 9.13 மணிக்குள் வலம்புரி விநாயகர், அய்யப்ப சாமி, பாலமுருகன் ஆலய விமானங்கள் மற்றும் மூலாலய மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
அன்னதானம்
கும்பாபிஷேகத்தை அய்யப்ப சாமி கோவில் அர்ச்சகர் ஜி.மணிவாசக குருக்கள் நடத்தி வைக்கிறார். பின்னர் மகா அபிஷேகம், தசதானம், தச தரிசனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய திருப்பணி குழுவினர் மற்றும் அய்யப்ப பக்தர்கள் வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் செய்துள்ளனர்.