ஊட்டியில் 'மகிழ்ச்சி வீதி' நிகழ்ச்சி
ஊட்டி கமர்சியல் சாலையில் மகிழ்ச்சி வீதி நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்றுலா பயணிகள் நடனமாடி குதூகலம் அடைந்தனர்.
ஊட்டி
ஊட்டி கமர்சியல் சாலையில் மகிழ்ச்சி வீதி நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்றுலா பயணிகள் நடனமாடி குதூகலம் அடைந்தனர்.
மகிழ்ச்சி வீதி
தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த இந்த காலத்தில் மக்கள் பரபரப்பான வாழக்கையில் எந்திரம் போல் இயங்கி கொண்டிருக்கின்றனர். இதனால் எளிதாக மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இதனால் உடல்நலம் மற்றும் மனநல பிரச்சினைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சினைகளில் இருந்து பொதுமக்களை வெளியே கொண்டு வருவதற்காகவும், வார விடுமுறையை கொண்டாடும் நோக்கில் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் வாகன போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்பட்டு 'மகிழ்ச்சி வீதி' (ஹேப்பி ஸ்ட்ரீட்) நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஊட்டிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் நீலகிரி மாவட்ட காவல்துறை மற்றும் தன்னார்வலர்கள் சார்பில், ஊட்டி கமர்சியல் சாலையில் மகிழ்ச்சி வீதி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை சேரிங்கிராஸ் முதல் கேசினோ சந்திப்பு வரை வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.
பாரம்பரிய நடனம்
நிகழ்ச்சியை நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து தோடர், கோத்தர் பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரிய நடனம் ஆடினர். நீலகிரியில் வசிக்கும் படுகர் மக்களின் பாரம்பரிய நடனம் நடந்தது. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்ததோடு, செல்போனில் வீடியோ எடுத்தனர். இதையடுத்து குழந்தைகள், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு சதுரங்கம், பல்லாங்குழி, கேரம் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடினர்.
மேலும் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் ஆடி பாடி மகிழ்ந்தனர். செண்டை மேளத்திற்கு குழந்தை நடனமாடியது பலரையும் கவர்ந்தது. தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கு பொதுமக்களிடையே கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மாதம் ஒரு முறை இந்த நிகழ்ச்சி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் தெரிவித்தார். இதில் கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் மணி, சவுந்திரராஜன், இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.