மாணவிகளுக்கு தொல்லை கொடுத்தால் கடும் நடவடிக்கை: முதல்-அமைச்சர் எச்சரிக்கை


மாணவிகளுக்கு தொல்லை கொடுத்தால் கடும் நடவடிக்கை: முதல்-அமைச்சர் எச்சரிக்கை
x

மாணவிகளுக்கு தொல்லை கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.

சென்னை,

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து முழு அளவுக்கு உடல்நலம் பெற்று வரவில்லை என்று சொன்னாலும், இடையிலே சில நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்கக்கூடிய வாய்ப்பை பெற்று வருகிறேன். கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட காரணத்தால், என்னுடைய தொண்டை சிறிது பாதிக்கப்பட்டிருக்கிறது. தொண்டை பாதிக்கப்பட்டாலும் தொண்டு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக என்னுடைய பணியை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறேன். அண்மைக்காலமாக தமிழகத்தில் நிகழ்ந்த சில நிகழ்வுகளை எண்ணிப்பார்க்கிறபோது எனக்கு உள்ளபடியே மனவேதனையாக இருக்கிறது.

கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள், அந்த கல்வி நிறுவனங்களை தொழிலாக, வர்த்தகமாக நினைக்காமல் தொண்டாக, கல்வி சேவையாக கருதவேண்டும். மாணவச் செல்வங்கள் பட்டங்கள் வாங்குவதற்காக மட்டும் கல்வி நிறுவனங்களுக்கு வரவில்லை. முதலில் தன்னம்பிக்கை, தைரியம், மன உறுதி ஆகியவற்றை அவர்களுக்கு, நீங்கள் அளிக்கவேண்டும். எத்தகைய சோதனைகளையும் எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் பெற்றவர்களாக தமிழ்நாட்டு மாணவச் செல்வங்கள் வளரவேண்டும். உங்களுக்கு ஏற்படும் தொல்லைகள், அவமானங்கள், இடையூறுகள் ஆகியவற்றை மாணவர்கள் அதிலும் குறிப்பாக மாணவிகள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.

நடவடிக்கை

மாணவிகளுக்கு பாலியல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ தொல்லை தரும் எத்தகைய இழி செயல் நடந்தாலும் தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது. உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி உடனடியாக அதற்குரிய தண்டனையை பெற்றுத்தரும். எந்த சூழலிலும் தற்கொலை எண்ணத்துக்கு மாணவிகள் தள்ளப்படக்கூடாது. இந்த இடத்துக்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்றால் எத்தனையோ சோதனைகளை கடந்துதான் இங்கே வந்திருக்கிறீர்கள். சோதனைகளைச் சாதனைகள் ஆக்கி வளர்ந்தாகவேண்டும். தமிழ்நாட்டு மாணவ-மாணவிகள் அறிவு கூர்மை கொண்டவர்களாக மட்டுமல்லாமல், உடல் உறுதியும், மன தைரியமும் கொண்டவர்களாக வளரவேண்டும். இதுதான் என்னுடைய ஆசை, என்னுடைய கனவு.

அத்தகைய கல்வியை, அறிவை, ஆற்றலை கல்வி நிறுவனங்கள் வழங்கவேண்டும். மாணவச் செல்வங்களே, தற்கொலை எண்ணம் கூடவே கூடாது. தலைநிமிரும் எண்ணம் தான் இருக்கவேண்டும். உயிரை மாய்த்துக்கொள்ளும் சிந்தனை கூடாது. உயிர்ப்பிக்கும் சிந்தனையே தேவை.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்துகொண்டோர்

விழாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், அசன் மவுலான எம்.எல்.ஏ., பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், குருநானக் கல்லூரியின் தலைவர் ராஜிந்தர் சிங் பாசின், பொதுச்செயலாளர் மஞ்சித் சிங் நய்யர், செயலாளர் குருமித்சிங் கனுஜா, கல்லூரி முதல்வர் எம்.ஜி.ரகுநாதன், ஆலோசகர் டாக்டர் மெர்லின் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

காக்னிசன்ட் புதிய அலுவலகம்

சென்னையை அடுத்த நாவலூரில் உள்ள ஓசோன் டெக்னோ பூங்காவில் காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் 6 லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள புதிய அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இந்த புதிய அலுவலகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிவார்கள். புதிய அலுவலக திறப்பு விழாவில் பணியாளர்களுடன் உரையாடியபோது, "தமிழ்நாடு அரசு தொழில் நிறுவனங்களின் முன்னேற்றத்துக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும்" என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கிரிக்கெட் விளையாடியதை நினைவுகூர்ந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கிரிக்கெட் விளையாடியதை நினைவு கூர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

சென்னை மாநகரத்தின் மேயராக இருந்தபோது குருநானக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவிலும் பங்கேற்று இளம் பட்டதாரிகளிடையே உரையாற்றிய நிகழ்வு இன்றைக்கும் என் நினைவிலே பசுமையாக, ஆழமாக பதிந்திருக்கிறது. இன்னும் சொன்னால், குருநானக் கல்லூரி அமைந்திருக்கின்ற வேளச்சேரி பகுதியில் தான் நான் மேயராக இருந்தபோது குடியிருந்தேன். கிட்டத்தட்ட 7 வருடங்கள் மேயராக இருந்தபோது, ஒவ்வொரு நாளும் குருநானக் கல்லூரியை தாண்டித்தான் நான் போய்க்கொண்டிருந்தேன். அதுமட்டுமல்ல, இந்த கல்லூரியில் 7 ஆண்டு காலம் நடைப்பயிற்சி செய்திருக்கிறேன். கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். அதெல்லாம் இப்போது எனக்கு நினைவிற்கு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story