நிலக்கடலை அறுவடை பணிகள் தீவிரம்


நிலக்கடலை அறுவடை பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 5 April 2023 12:30 AM IST (Updated: 5 April 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்ட கடலோர கிராமங்களில் நிலக்கடலை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பருவம் தவறிய மழை பாதிப்புக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

நாகை மாவட்ட கடலோர கிராமங்களில் நிலக்கடலை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பருவம் தவறிய மழை பாதிப்புக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிலக்கடலை சாகுபடி

தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களுள் நாகையும் ஒன்று. இங்கு மீன்பிடித்தலை போல விவசாயமும் பிரதான தொழிலாகும். நெல், பருத்தி சாகுபடி பரவலாக நடக்கிறது. ஆங்காங்கே சிறிய அளவில் காய்கறிகளையும் விவசாயிகள் விளைவித்து வருகிறார்கள்.

பருவம் தவறி மழை பெய்வதாலும், சில நேரங்களில் போதிய அளவு தண்ணீர் கிடைக்காததாலும் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்க வேண்டி உள்ளது. நாகை மாவட்ட விவசாயிகள் மழையை பெரிதும் நம்பி உள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் பருவம் தவறி பெய்த மழையால் நாகை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன.

நிலக்கடலை சாகுபடி

நாகை அருகே பூவைத்தேடி, காமேஸ்வரம், விழுந்தமாவடி, வேட்டைக்காரன் இருப்பு, புதுப்பள்ளி, தாண்டவமூர்த்திகாடு உள்ளிட்ட கிராமங்கள் கடலோர பகுதியில் அமைந்துள்ளன. இந்த பகுதியில் தற்போது ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

100 நாள் பயிரான நிலக்கடலை, ஆண்டுக்கு 3 போகமாக பயிரிடப்படுகிறது. பெரும்பாலான தென்னை விவசாயிகள் ஊடுபயிராக நிலக்கடலையை சாகுபடி செய்துள்ளனர்.

அறுவடை தீவிரம்

அந்த வகையில் தற்போது பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. விழுந்தமாவடியில் நிலக்கடலை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகள் ஆர்வமுடன் நிலக்கடலை அறுவடை செய்து வருகின்றனர்.

இங்கிருந்து நிலக்கடலை வேளாங்கண்ணி அருகே உள்ள பரவை சந்தைக்கும், வெளி மாவட்டத்திற்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

இதுகுறித்து நிலக்கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூறியதாவது:-

நடப்பு ஆண்டு பருவம் தவறி கனமழை பெய்ததால் நிலக்கடலை பயிர்கள் பாதிக்கப்பட்டன. நிலக்கடலை பயிரின் வேர் பகுதியில் தண்ணீர் தேங்கி, பயிர்கள் அழுகி மகசூல் குறைந்துள்ளது. ஒரு செடிக்கு 25 முதல் 35 கடலை பருப்புகள் இருந்தால் மட்டுமே லாபம் கிடைக்கும். ஆனால் தற்போது 5 அல்லது 10 என்ற எண்ணிக்கையிலேயே விளைச்சல் கண்டுள்ளது.

மகசூல் இழப்பு

இதனால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில், மகசூல் குறைந்து உள்ளதால் கடலையை அறுவடை செய்வதற்கான கூலி வழங்குவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனால் நாங்களே களத்தில் இறங்கி கடலையை அறுவடை செய்து வருகிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு பருவம் தவறிய மழை பாதிப்புக்குரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் கூடுதல் ரக விதைகளை மானிய விலையில் வழங்க வேண்டும். இதன் மூலம் நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உத்வேகம் ஏற்படும். அதிகம் லாபம் கிடைக்க வழி வகுக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story