விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதா?


விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதா?
x

விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதா? என விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விருதுநகர்

'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' என்று வள்ளுவப் பெருந்தகையால் பெருமையுடன் பேசப்படும் உழவுத் தொழில் வந்தனைக்குரியது என்றாலும், உழவுத்தொழில் செய்யும் விவசாயிகள் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே தான் பயிர்ச்சாகுபடி செய்யும் நிலை நீடிக்கிறது.

மானாவாரி சாகுபடி

விருதுநகர் மாவட்டத்தை பொருத்தமட்டில் மானாவாரி பயிர்ச்சாகுபடியே பிரதானமாக நடந்து வரும் நிலையில் மழை பொய்த்தால் விவசாயிகளின் வாழ்வும் பொய்த்து விடும் நிலையே உள்ளது. மாவட்டத்தை பொருத்தமட்டில் ஓரளவு கண்மாய் பாசன வசதி இருந்தாலும் மானாவாரி சாகுபடியே பிரதானமாக நடந்து வருகிறது.

இதில் மாவட்டத்தின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நெல் சாகுபடி நடந்து வந்தாலும் இதர தானிய பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் கரும்பு, பருத்தி, வத்தல், மக்காச்சோளம் போன்ற பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன. மேலும் தோட்ட பயிர்களான தென்னை, மா சாகுபடியும் மாவட்டத்தின் மேற்கே உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு ஆகிய பகுதிகளில் நடந்து வருகிறது. பருவமழையை பொருத்தமட்டில் கடந்த 4 ஆண்டுகளாக ஓரளவு கை கொடுத்து வந்தாலும் நடப்பு ஆண்டில் பருவமழை வழக்கத்தை விட குறைவாக பெய்யும் என்ற கணிப்பும் உள்ளது.

நீர்வள மேம்பாடு

மத்திய,மாநில அரசுகள் விவசாயிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக கூறி வருகின்றன. பிரதமரும் விவசாயிகளுக்காக நிதி உதவியும் செய்து வருகிறார். மேலும் பயிர்ச்சாகுபடிக்கு தேவையான நீர்வள மேம்பாட்டில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்துவதாக கூறப்பட்டாலும் உண்மையில் நீர்வள மேம்பாட்டிற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

மத்திய அரசு விவசாயிகள் விளைபொருட்களை தேசிய அளவில் முன்னணி சந்தை மூலம் விற்பனை செய்து லாபம் பெறலாம் என்று அதற்கான திட்டத்தை செயல்படுத்தினாலும் அதன் முழு பலன் விவசாயிகளுக்கு கிடைக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மாநில அரசை பொருத்தமட்டில் சமீப காலமாக விவசாயத்திற்காக தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

குறைதீர்க்கும் கூட்டம்

இதன் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும் திட்ட பலன்கள் எந்த அளவிற்கு விவசாயிகளுக்கு சென்றடைகிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

மாவட்ட அளவில் விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்காக மாதந்தோறும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. மேலும் சமீபகாலமாக கோட்ட அளவிலும் கோட்டாட்சியர்கள் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை நேரடியாக தெரிவித்து நிவாரணம் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டாலும் விவசாயிகளின் கோரிக்கைகளை முழுமையாக கேட்க யாரும் தயாராக இல்லை.

நிரந்தர தீர்வு

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் அடிப்படை தேவைகள் தொடர்பான கோரிக்கைகளை தெரிவித்தாலும் பல்வேறு கோரிக்கைகளை மாநில அளவில் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் என்று அதிகாரிகள் புறந்தள்ளி விடுகின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகம் விவசாயிகள் தரும் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தொடர்புடைய துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாலும் ஒரு சில அதிகாரிகள் அதில் போதிய கவனம் செலுத்தாத நிலையே நீடிக்கிறது.

அதிலும் ஒவ்வொரு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திலும் மாவட்ட விவசாய துறையால் செய்யப்பட்ட திட்ட பணிகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறப்படுகிறது. அது எந்த அளவுக்கு விவசாயிகளை போய் சேர்ந்து உள்ளது என்பதற்கான விளக்கம் கூறப்படுவதில்லை. குறிப்பாக பயிர் காப்பீட்டுத்தொகை மற்றும் வனவிலங்குகளால் பயிர் சேதம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஒவ்வொரு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திலும் விவசாயிகளால் புகார் கூறப்படும் நிலையிலும் இதற்கு நிரந்தர தீர்வு காணப்படுவதில்லை.

பட்டா மாறுதல்

வனத்துறையினர் வனப்பகுதியையும், வன விலங்குகளையும் பாதுகாக்க தயாராக உள்ளார்களே தவிர விவசாயிகளை பாதுகாக்க தயாராக இல்லை. மொத்தத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தினால் விவசாயிகளுக்கான குறைகள் தீர்ந்துள்ளதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

விஜய் முருகன் (மாநில விவசாய சங்க நிர்வாகி):-

விவசாயிகள் எந்த திட்டப்பலன்களை பெற வேண்டும் என்றாலும் நிலத்திற்கு அவர்களது பெயரில் பட்டா இருக்க வேண்டும். ஆனால் பட்டா அவர்களது குடும்ப பெரியோர் பெயரில் இருக்கும் போது பட்டா மாறுதல் செய்ய வேண்டி மனு கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்க தயாராக இல்லை. இதனால் திட்ட பலன்களை முழுமையாக விவசாயிகள் பெற முடியாத நிலை ஏற்படுகிறது.

ஒரு சில கோரிக்கைகளை செவிமடுத்து கேட்டு அதற்கு தீர்வு காணப்பட்டாலும் பிரதான கோரிக்கைகளான வனவிலங்குகளால் பயிர் சேதம், பயிர் இழப்பீட்டுத் தொகை பட்டுவாடா பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள 780 யூனியன் கண்மாய்களில் 200 கன்மாய்கள் மட்டுமே மராமத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பிற கண்மாய்களை மராமத்து செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. மேலும் விவசாயிகள் நலத்திட்டங்கள் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. விவசாயிகளுக்காக பல்வேறு துறைகள் செயல்பட்டு வருவதாக கூறப்பட்டாலும் துறை அதிகாரிகள் களப்பணியில் ஆர்வம் காட்ட வேண்டும்.

இழப்பீடு பெற முடியாத நிலை

ராமச்சந்திர ராஜா (விவசாயிகள் சங்க நிர்வாகி):-

மாநில அரசு விவசாயிகளின் குறைகளை தீர்க்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முன் வந்தாலும் மாவட்ட அளவில் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட அதிகாரிகளும் விவசாயிகளின் குறைகளை தீர்க்க தயாராக இல்லை. உதாரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே மாமரங்களுக்கு பயிர் காப்பீடு தேவை என்று கோரிக்கை வைத்த நிலையில் அதை அதிகாரிகள் கண்டு கொள்ளாத நிலையில் தற்போது ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு பெற முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

இதேபோன்று வனவிலங்குகளை பொருத்தமட்டில் மத்திய, மாநில அரசுகள் சட்ட திருத்தம் செய்ய வேண்டியநிலை இருந்தாலும் இதனால் பயிர்ச்சேதம் ஏற்படுகிறது என்று அதிகாரியிடம் பலமுறை முறையிட்ட போதிலும் அவர்கள் நடவடிக்கை எடுக்க தயாராக இல்லை. விவசாயத்துறை அதிகாரிகள் விவசாயிகள் நலனுக்கு கை கொடுக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்த்த போதிலும் எங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு உதவிகள் கிடைப்பதில்லை. மாவட்ட நிர்வாகம் முறையான கண்காணிப்பை மேற்கொண்டால் தான் அதிகாரிகள் செயல்படும் நிலை ஏற்படும்.

அலைக்கழிப்பு

சேத்தூர் விவசாயி அம்மையப்பன்:-

பொதுவாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆண்டுதோறும் விளை நிலங்களில் மா, வாழை, கரும்பு, சோளம், தென்னை போன்ற பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்தி நஷ்டம் ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து பல முறை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தும் பலன் இல்லை.

இதுகுறித்து கொடுக்கப்படும் மனுக்கள் மீது அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சேதமடைந்த பயிர்களுக்கு உரிய முறையில் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளை அதிகாரிகள் அலைக்கழிப்பதை தவிர்க்க வேண்டும்.

நிவாரணத்தொகை

மம்சாபுரம் விவசாயி கொன்றையாண்டி:- விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு மானியங்களையும் நலத்திட்டங்களையும் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால் அந்த திட்டங்களை பெற படாத கஷ்டங்களை பட வேண்டி உள்ளது. மேலும் வனவிலங்குகளால் பாதிப்புக்கு உள்ளாகும் விவசாயிகளுக்கு நிவாரணத்தொகைகளை உடனே வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேரிடர் காலங்களில் நிவாரணத்தொகைகளை உடனுக்குடன் வழங்க வேண்டும். பயிர்களுக்கு பயிர்க்காப்பீட்டு திட்டம் அமலில் உள்ளது. ஆனால் பல விவசாயிகளுக்கு அதன் விவரம் தெரிவது இல்லை. பயிர்கள் சேதமடைந்தாலும் அல்லது கருகி போனாலும் நிவாரணம் பெற அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மொத்தத்தில் விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story