கலெக்டர் அலுவலகத்தில் அவசரகதியில் போடப்பட்ட சாலை மழையினால் சேதம்
முதல்-அமைச்சர் வருகைக்காக கலெக்டர் அலுவலகத்தில் அவசரகதியில் போடப்பட்ட சாலை மழையினால் சேதமடைந்துள்ளது. இதனால் சமூக ஆர்வலர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 26, 27-ந் தேதிகளில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும், சட்டம்- ஒழுங்கு நிலவரம் குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் மற்றும் பிற துறைகளின் அரசு அலுவலகங்கள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளித்தன. அதுபோல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் செல்லக்கூடிய சாலைகளும் புதியதாக தார் சாலையாக மாற்றப்பட்டது.
மழையினால் சேதம்
இந்நிலையில் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் தார் சாலை, நேற்று முன்தினம் இரவு பெய்த சாதாரண மழையினால் தாக்குப்பிடிக்க முடியாமல் சாலையோரம் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. மிகவும் தரமற்ற முறையிலும், முதல்-அமைச்சர் வருகைக்காகவும் அவசர கதியில் அமைக்கப்பட்ட தார் சாலை, ஒரு நாள் பெய்த மழைக்கு உருக்குலைந்து போயிருப்பது, சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.