கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபெண் மீது தாக்குதல்


தினத்தந்தி 5 May 2023 12:15 AM IST (Updated: 5 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கொரடாச்சேரி அருகே கொடுத்த பணத்தை திரும்பி கேட்ட பெண்ணை தாக்கிய சாமியார் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்

கொரடாச்சேரி:

கொரடாச்சேரி அருகே கொடுத்த பணத்தை திரும்பி கேட்ட பெண்ணை தாக்கிய சாமியார் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.

சாமியார்

திருவாரூரை அடுத்த கொரடாச்சேரி அருகே உள்ள கொடிமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கருணாநிதி(வயது 48). இவர் 9-ம் வகுப்பு படிக்கும்போது கேரளா சென்று அங்கு மாந்திரீகம், ஜோதிடம் போன்றவற்றை கற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து ஓசூருக்கு சென்ற கருணாநிதி அங்கு ஜோதிட நிலையம் தொடங்கி நடத்தி வந்துள்ளார். இவர், கர்நாடகாவை சேர்ந்த லதாபாய் மற்றும் மல்லிகா என்ற 2 பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு 8 குழந்தைகள் உள்ளனர். சாமியார் கருணாநிதி சென்னை மற்றும் ஓசூரில் ஜோதிட நிலையம் நடத்தி வருகிறார்.

முழுமையாக நம்பினார்

கடந்த 2013-ம் ஆண்டு சென்னையை அடுத்த ஆவடி நெமிலிச்சேரி பகுதியை சேர்ந்த யுவராணி என்பவர், சாமியாரின் ஜோதிட நிலையத்தை தெரிந்து கொண்டு சாமியார் கருணாநிதியை சந்தித்துள்ளார். அப்போது கருணாநிதி உன் கணவருக்கு செய்வினை செய்யப்பட்டுள்ளது. அதனை எடுத்துத் தருகிறேன் என்று சில பொருட்கள் கொடுத்துள்ளார். அதை வாங்கிச்சென்ற 10 நாட்களில் யுவராணியின் பிரச்சினை சரியானதால் யுவராணி சாமியாரை முழுமையாக நம்பினார்.

ரூ.24 லட்சம், 16 பவுன் நகைகள்

அவர் கேட்கும்போது எல்லாம் பணம், நகைகளை யுவராணி கொடுத்தாக தெரிகிறது. நேரிலும், வங்கி கணக்கு மூலமாகவும் ரூ.24 லட்சம் மற்றும் 16 பவுன் நகைகளை கொடுத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் யுவராணியிடம் சீட்டு போட்டவர்கள் பணம் கேட்டு அவரிடம் நெருக்கடி கொடுத்துள்ளனர்.

கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார்

இதனால் சாமியார் கருணாநிதியிடம் கொடுத்த பணத்தை யுவராணி திருப்பி கேட்டுள்ளார். யுவராணி அடிக்கடி வந்து பணம் கேட்டதால் கடுப்பான சாமியார் கருணாநிதி சென்னையில் இருந்து சொந்த ஊரான கொடிமங்கலத்திற்கு வந்துள்ளார்.

கடந்த 7 ஆண்டுகளாக சாமியாரிடம் போன் மூலம் தொடர்ந்து பணத்தை கேட்டு வந்த யுவராணி, கடந்த 6 மாதமாக திருவாரூரில் தங்கியிருந்து பணத்தை கேட்டு வந்துள்ளார்.

பெண் மீது தாக்குதல்

நேற்று முன்தினம் சாமியார் வசிக்கும் கொடிமங்கலம் கிராமத்துக்கு சென்று ஊர் மக்களிடம் யுவராணி முறையிட்டுள்ளார்.

அப்போது சாமியார் கருணாநிதி மற்றும் அவரது 2-வது மனைவி மல்லிகா ஆகியோர் சேர்ந்து யுவராணியை தாக்கினர்.

மனைவியுடன், சாமியார் கைது

இதில் காயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து கொரடாச்சேரி போலீசில் யுவராணி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமியார் கருணாநிதி மற்றும் அவரது 2-வது மனைவி மல்லிகா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


Next Story