வீடு புகுந்து வியாபாரியை தாக்கி 15 பவுன் நகை- பணம் கொள்ளைமர்ம நபர்களுக்கு வலைவீச்சு


வீடு புகுந்து வியாபாரியை தாக்கி 15 பவுன் நகை- பணம் கொள்ளைமர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

ஈரோடு

ஈரோடு அருகே வீடு புகுந்து வியாபாரியை தாக்கி 15 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வியாபாரி

ஈரோடு அருகே உள்ள ரகுபதி நாயக்கன்பாளையம் ஜீவானந்தம் வீதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 57). இவர் பாரதீய ஜனதா கட்சியின் காசிபாளையம் மண்டல வர்த்தக அணி பிரிவு முன்னாள் தலைவராக இருந்து உள்ளார். மேலும் இவர் அவல்பூந்துறை, ரிங் ரோடு, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் வர்க்கி விற்பனை செய்து வருகிறார். இவருடைய மனைவி பானுமதி. இவர் நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டம் பெரிய மணலியில் வசித்து வரும் தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டார்.

தாக்கினர்

இதனால் நேற்று முன்தினம் இரவு வீட்டில் குணசேகரன் தனியாக தூங்கி கொண்டிருந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை குணசேகரன் வீட்டுக்கு மர்ம நபர்கள் வந்து உள்ளனர். அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அப்போது சத்தம் கேட்டு வீட்டின் உள்ளே தூங்கி கொண்டிருந்த குணசேகரன், திடுக்கிட்டு எழுந்து யார் என்று கேட்டுள்ளார்.

உடனே அவர்கள் அருகில் கிடந்த மண்வெட்டியின் கைப்பிடியை எடுத்து குணசேகரனை சரமாரியாக தாக்கி உள்ளனர். பின்னர் அவரிடம் நகை மற்றும் பணம் எங்கே இருக்கிறது என மர்ம நபர்கள் கேட்டு உள்ளனர்.

நகை- பணம் கொள்ளை

இதனால் பயந்துபோன அவர், வீட்டில் உள்ள பீரோவில் நகை மற்றும் பணம் உள்ளதாக தெரிவித்தார். உடனே கொள்ளையர்கள் பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்து 67 ஆயிரத்தை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

கொள்ளையர்கள் தாக்கியதில் காயம் அடைந்த குணசேகரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இது பற்றி அறிந்ததும் ஈரோடு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

பரபரப்பு

மேலும் சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. இதையடுத்து மோப்ப நாய் சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் வரை ஓடிச் சென்றது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. அதுமட்டுமின்றி கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான ரேகைகளை பதிவு செய்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு அருகே வியாபாரியை தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story