அசாமில் நடந்த சர்வதேச மல்லர்கம்ப போட்டியில்விழுப்புரத்தை சேர்ந்தவர் தங்கப்பதக்கம் வென்று அசத்தல்
அசாமில் நடந்த சர்வதேச மல்லர்கம்ப போட்டியில் விழுப்புரத்தை சேர்ந்தவர் தங்கப்பதக்கம் வென்று அசத்தினாா்.
அசாம் மாநிலத்தில் 2-வது சர்வதேச மல்லர் கம்ப போட்டி கடந்த 9-ந் தேதி முதல் தொடங்கி 11-ந் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தின் சார்பில் விழுப்புரம் பெரியகாலனியை சேர்ந்த நட்சத்திர மல்லர்கம்ப விளையாட்டு வீரரான ஹேமச்சந்திரன் கலந்துகொண்டார்.
இவர் தனிநபர் மற்றும் குழுப்போட்டி ஆகிய 2 விளையாட்டு பிரிவிலும் தனது அபார திறமையால் சாதித்து தங்கப்பதக்கம் வென்று மகத்தான சாதனை புரிந்துள்ளார். தற்போது தங்கப்பதக்கம் வென்றுள்ள ஹேமச்சந்திரன் கடந்த 2 ஆண்டில் மட்டும் 36-வது தேசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கமும், பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியில் தங்கப்பதக்கமும், கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் வெண்கலப்பதக்கமும் வென்று முத்திரை பதித்துள்ளார்.
இவருடைய தந்தை முனியப்பன் கூலி வேலை செய்து வருகிறார். தாய் சசி விழுப்புரம் நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த மாணவர் ஹேமச்சந்திரன் தற்போது விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அளவில் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த ஏராளமான வீரர்கள் பங்கேற்று தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான மல்லர்கம்பம் கொஞ்சம், கொஞ்சமாக காணாமல் போய்வரும் நிலையில் மீண்டும் அதை உயிர்ப்பிப்பதுபோல் தமிழக வீரர்கள் மல்லர்கம்பத்தில் பங்கேற்று சாதித்து வருவது மகிழ்ச்சியளிப்பதாக மல்லர்கம்ப பயிற்சியாளர்கள் பெருமிதத்துடன் கூறுகின்றனர்.