பகிரங்கமாக கருத்து தெரிவிக்கிற போட்டி அரசியல் நடத்தி வருகிறார்
தமிழக கவர்னர் மாநில அரசை எதிர்த்து பகிரங்கமாக கருத்து தெரிவிக்கிற போட்டி அரசியல் நடத்தி வருகிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.
தமிழக கவர்னர் மாநில அரசை எதிர்த்து பகிரங்கமாக கருத்து தெரிவிக்கிற போட்டி அரசியல் நடத்தி வருகிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.
மாநில குழு கூட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு கூட்டம் 3 நாட்கள் திருவண்ணாமலையில் நடைபெற்றது. கூட்டத்தின் நிறைவு நாள் இன்று மாலை நடந்தது.
இந்த நிலையில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் தமிழ்நாட்டில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி இணைந்து மகத்தான வெற்றியை பெறுவதற்கான பணி இப்போது இருந்து தொடங்குவது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
விரைவில் நடைபெற உள்ள குளிர்கால கூட்டத் தொடரில் மத்திய அரசால் மின்சார மசோதா 2022 திருத்தப்படும் சூழ்நிலை உள்ளது. இந்த மசோதா திருத்தப்பட்டால் தமிழ்நாட்டில் மின்சாரம் பயன்படுத்தும் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும்.
போட்டி அரசியல்
மின்சார வாரியத்தை தனியாரிடம் ஒப்படைத்து இஷ்டம் போல் அவர்கள் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்கக் கூடிய நிலைமை ஏற்படும். தமிழககவர்னர் ரவி அரசியல் சட்ட வரம்புகளை மீறி செயல்படுகிறார்.
மாநில அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை. மாநில அரசை எதிர்த்து பகிரங்கமாக கருத்து தெரிவிக்கிற ஒரு போட்டி அரசியல் நடத்தி வருகிறார்.
பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கவர்னர்களை பயன்படுத்தி ஒரு போட்டி ஆட்சியை நடத்துகின்ற முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது. இதுபோன்று செயல்படும் கவர்னர்களை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
நந்தன் கால்வாய் திட்டம்
ஜி.எஸ்.டி.யினால் பொருட்கள் விலை உயர்வு, பெட்ரோல்- டீசல் வரி உயர்வு போன்ற மத்திய அரசின் கொள்கையினால் மக்கள் கடுமையான அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மத்திய அரசின் கொள்கையை கண்டித்து டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் முக்கியமான 4 இடங்களில் மிக பெரிய அளவில் பெருந்திரள் கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மழை கால வெள்ள பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு ஏரி, குளங்களின் கால்வாய்களை தூர்வாருவது, மழை நீர் வடிகால்வாய் தூர்வாருவது உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்ெபண்ணையாறு- பாலாறு இணைப்பு திட்டத்துக்கு ரூ.270 கோடி நிதி ஒதுக்கி திட்டம் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது.
நந்தன் கால்வாய் திட்டம் ஏற்கனவே அறிவித்து பெரிய அளவில் விழாக்கள் நடத்தப்பட்டாலும் அதுவும் இன்னும் நிறைவு பெறவில்லை. இனாம்காரியந்தல் அருகில் சட்ட வரம்புகளை மீறி செயல்படும் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும்.
தற்போது படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது. தொகுப்பூதியம், மதிப்பூதியம், ஒப்பந்தம் அடிப்படையில் வேலையில் அமர்த்தி பணி நிரந்தரம் இருக்காது என்று மத்திய அரசாங்கம் விதி போடுவதை ஏற்கனவே உள்ள அ.தி.மு.க. அரசு நிறைவேற்றியது.
அதனை எதிர்த்து போராடிய தி.மு.க. அரசும் இன்று அதனை செயல்படுத்துவது தமிழகத்தில் ஆபத்தை உருவாக்கும்.
ஸ்ெடர்லைட் ஆலை
மனித கழிவுகளை மனிதர்களே அகற்ற கூடாது என்று சட்டம் இயற்றி 30 வருடங்களாகிறது. சட்டம் அமலில் இருப்பது யாருக்கும் தெரியவில்லை. இந்த தொழிலில் உள்ளவர்களுக்கு மாற்று வேலை கிடைக்காததினால் இந்த தொழிலில் தான் அவர்கள் ஈடுபடுகின்றனர்.
எனவே மனித கழிவுகளை அகற்ற கூடியவர்கள் தமிழகத்தில் எவ்வளவு பேர் உள்ளனர் என்று அரசு ஆய்வு செய்து அவர்களுக்கு மாற்று வேலை அல்லது தொழில் வழங்கினால் தான் இந்த நிலையை மாற்ற முடியும்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்ெடர்லைட் என்ற செம்பு தயாரிக்கிற தொழிற்சாலை எந்த சூழ்நிலையிலும் திறக்க அனுமதிக்க முடியாது. அந்த ஆலையினால் தான் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது என்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலையை வேறு தொழிற்சாலையாக மாற்றி நடத்தலாம். ஆனால் செம்பு தயாரிக்க கூடிய தொழிற்சாலையை மீண்டும் செயல்படுத்தினால் உயிரிழந்த 13 உயிர்களுக்கு நாம் துரோகம் விளைவிக்கின்ற மாதிரி ஆகிவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது அரசியல் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், மாநில குழு உறுப்பினர் பத்ரி, மாவட்ட செயலாளர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.