தூத்துக்குடியில் வீட்டில் பதுக்கி வைத்த2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
தூத்துக்குடியில் வீட்டில் பதுக்கி வைத்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடியில் 2 டன் ரேஷன் அரிசியை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கண்காணிப்பு
தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம், ஏட்டு கந்தசுப்பிரமணியன், பூலையா நாகராஜன் ஆகியோர் தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அண்ணாநகர் 2-வது தெருவில் ஒரு மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேர் சில மூட்டைகளை இறக்கி கொண்டு இருந்தனர்.
பறிமுதல்
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது மூட்டையை இறக்கி கொண்டு இருந்த ஒருவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதனால் மற்றொருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தூத்துக்குடி கதிர்வேல்நகரை சேர்ந்த கணேசன் (வயது 47) என்பது தெரியவந்தது. இவர்கள் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி மாட்டு தீவனத்துக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது.
கைது
இதனால் அவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒருவீட்டில் அடுக்கி வைத்து இருந்த மூட்டைகளை சோதனை செய்தனர். அதில் 40 கிலோ எடை கொண்ட 51 மூட்டைகளில் 2 ஆயிரத்து 40 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
உடனடியாக தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசனை கைது செய்தனர். அங்கு பதுக்கிவைத்து இருந்த ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய சங்கரன்கோவிலை சேர்ந்த மணிகண்டன் என்பவரை தேடி வருகின்றனர்.