கோவில்பட்டியில் போஸ்டர் ஒட்ட அனுமதிக்க மறுத்த போலீசாரை தாக்கிய பா.ஜனதா, இந்து முன்னணியினர் 6 பேர் கைது
கோவில்பட்டியில் போஸ்டர் ஒட்ட அனுமதிக்க மறுத்த போலீசாரை தாக்கிய பா.ஜனதா, இந்து முன்னணியினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் போஸ்டர் ஒட்ட அனுமதிக்க மறுத்த போலீசாரை தாக்கிய பா.ஜனதா, இந்து முன்னணியினர் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
போஸ்டர் ஒட்ட அனுமதி மறுப்பு
இந்துக்களை அவதூறாக பேசியதாக தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவைக் கண்டித்து, கோவில்பட்டியில் இந்து முன்னணியினர், பா.ஜனதாவினர் நேற்று முன்தினம் இரவில் போஸ்டர் ஒட்டினர்.
அப்போது அந்த வழியாக காரில் ரோந்து சென்ற கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், அனுமதியின்றி போஸ்டர் ஒட்டக்கூடாது என்று அறிவுறுத்தினார். மேலும் அவர்களிடம் இருந்த போஸ்டரையும் பறித்ததாக கூறப்படுகிறது.
போலீசார் மீது தாக்குதல்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்து முன்னணியினர், பா.ஜனதாவினர் போலீஸ் இன்ஸ்பெக்டரின் காரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது காரில் இருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்தை சிலர் தாக்கினர். இதில் இன்ஸ்பெக்டரின் சட்டை கிழிந்து சேதமடைந்தது. இதனை தடுக்க முயன்ற இன்ஸ்பெக்டரின் கார் டிரைவரும், போலீஸ்காரருமான பாண்டியையும் தாக்கினர்.
எனினும் தங்களை தாக்கிய சிலரை போலீசார் விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை காரில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
6 பேர் கைது
போலீசாரை தாக்கியது தொடர்பாக பா.ஜனதா நகர தலைவர் சீனிவாசன், மாவட்ட தரவு மேலாண்மை தலைவர் ரகு பாபு, இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாவட்ட பொதுச்செயலாளர் பரமசிவம், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் வெங்கடேசன், நகர தலைவர் மற்றொரு சீனிவாசன், துணைத்தலைவர் பொன்சேகர் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே காயமடைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், போலீஸ்காரர் பாண்டி ஆகிய 2 பேரும் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கூடுதல் சூப்பிரண்டு விசாரணை
காயமடைந்த போலீசாரை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் சந்தித்து விசாரித்தார்.
கோவில்பட்டியில் போலீசாரை தாக்கிய பா.ஜ.க., இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
----