கூடுதல் பணம் தருவதாக கூறி டெலிகிராம் மூலம் 'லிங்க்' அனுப்பி பெண்களிடம் ரூ.12½ லட்சம் மோசடி-சைபர் கிரைம் போலீசார் விசாரணை
கூடுதல் பணம் தருவதாக டெலிகிராம் மூலம் லிங்க் அனுப்பி, வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் ரூ.12½ லட்சம் மோசடி செய்யப்பட்டு உள்ளது.
ஊட்டி
கூடுதல் பணம் தருவதாக டெலிகிராம் மூலம் லிங்க் அனுப்பி, வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் ரூ.12½ லட்சம் மோசடி செய்யப்பட்டு உள்ளது.
கூடுதல் பணம்
நீலகிரி மாவட்டம் ஊட்டி டவுன் பகுதியில் வசித்து வரும் 35 வயது பெண், வீட்டில் இருந்து கொண்டு பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு ஆன்லைன்மூலம் ப்ராஜெக்ட் செய்து கொடுக்கும் வேலை செய்து வருகிறார். இவருடைய கணவர், ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
அந்தப் பெண் ஆன்லைன் மூலம் அதிக நேரம் பணியாற்றி வந்ததால் மர்ம கும்பல் ஒன்று அந்த பெண்ணுக்கு டெலிகிராம் மூலம் ஒரு லிங்க் அனுப்பி, குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பினால் கூடுதல் பணம் அனுப்புவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
ரூ.7¾ லட்சம்
இதை நம்பிய அந்தப் பெண் முதலில் ரூ.1000 முதலீடு செய்துள்ளார். அதற்கு ரூ.1300 கிடைத்துள்ளது. இதனால் ஆசை அதிகரித்ததால் அந்தப் பெண் 2-வது முறையாக ரூ.1 லட்சத்து 81 ஆயிரம் முதலீடு செய்துள்ளார். ஆனால் அந்த பணம் திரும்ப வரவில்லை.
மேலும் அந்தப் பெண்ணிடம் டெலிகிராம் மெசேஜ் மூலம் தொடர்பு கொண்ட கும்பல், கூடுதலாக ரூ.3½ லட்சம் செலுத்தினால் பணம் தருவதாக கூறி ஏமாற்றியுள்ளது. கைவிட்ட பணத்தை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்பதால் அந்த பணத்தையும் செலுத்தி உள்ளார். அதன் பின்னர் மோசடி கும்பலின் பொய் வாக்குறுதிகளை கேட்டு மேலும் ரூ.2 லட்சம் அனுப்பி உள்ளார். இவ்வாறாக ரூ.7¾ லட்சம் வரை செலுத்தியுள்ளார்.
இதன் பின்னர் அந்த கும்பலிடம் இருந்து எந்த தகவலும் வராததால் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்தப் பெண் இதுகுறித்து ஊட்டி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தனிப்படை அமைப்பு
இதேபோல் ஊட்டியை சேர்ந்த மற்றொரு பள்ளி ஆசிரியையிடம் டெலிகிராம் மெசேஜ் மூலம் லிங்க் அனுப்பி, பணம் முதலீடு செய்தால் கூடுதல் தொகை கிடைக்கும் என்று நம்ப வைத்து ரூ.4¾ லட்சம் மோசடி செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் பல்வேறு பெண்களிடம் மோசடி செய்யப்பட்டுள்ளது என்றும் பலர் புகார் கூற தயங்குகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
எனவே இதுகுறித்து விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சவுந்தரராஜன் அறிவுறுத்தலின் பேரில் இன்ஸ்பெக்டர் பிலிப், சப்- இன்ஸ்பெக்டர் கலைவாணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், வீட்டில் இருந்து பல்வேறு நிறுவனங்களுக்கு பணியாற்றும் பெண்களை ரேண்டம் முறையில் தேர்வு செய்து டெலிகிராம் மூலம் மெசேஜ் அனுப்பி பல்வேறு கும்பல்கள் மோசடியில் ஈடுபடுகிறது. டெலிகிராம் மூலம் லிங்க் அனுப்புவதால் அவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதில், பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் இந்த முறையை அவர்கள் கையாளுகின்றனர். இதை வட மாநில கும்பல்கள் ஒரு தொழிலாக செய்து வருகின்றனர்.இதில் பணத்தை ஏமாந்தவர்கள் போலீசில் புகார் அளிக்கப் போவதாக கூறினால், அந்த கும்பல் மேலும் பல்வேறு மிரட்டல்கள் தருவதாக தகவல் வந்துள்ளது. டெலிகிராம் மூலம் லிங்க் அனுப்பி பணம் வாங்குவதுடன் அவர்களை நம்ப வைப்பதற்காக பல்வேறு டாஸ்குகள் அனுப்பப்படுகிறது. இதனால் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏமாந்தவர்கள் பணத்தை மீட்க வங்கிக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது என்றனர்.