இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஆ.ராசா எம்.பி. மீது போலீசில் புகார்
இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஆ.ராசா எம்.பி. மீது போலீசில் புகார்
ஊட்டி
தி.மு.க. எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆ.ராசா கடந்த 6-ந் தேதி வேப்பேரி, பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர் உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி இந்து மதம் குறித்து பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை, தி.மு.க. எம்.பி., மீண்டும் ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை காட்டியுள்ளார் என்று விமர்சித்திருந்தார்.இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஆ.ராசா மீது மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் நகரம், கொலக்கம்பை மற்றும் வெலிங்டன் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் இந்து அமைப்பினர் மற்றும் பா.ஜ.க.வினர் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்துள்ளனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் அமைப்பு சார்பில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.