நர்சு வீட்டில் நகை, பணம் திருடிய வாலிபர் கைது
குளச்சல் அருகே நர்சு வீட்டில் நகை, பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
குளச்சல்:
குளச்சல் அருகே நர்சு வீட்டில் நகை, பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நர்சு வீட்டில்...
குளச்சல் அருகே கல்லுக்கூட்டம் பிள்ளவிளையை சேர்ந்தவர் காட்சன்
(வயது 41). இவருடைய மனைவி ஸ்ரீசுதா (39). இவர்களுக்கு 3 வயதில் மகள் உள்ளார். ஸ்ரீசுதா சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்க்கிறார்.
வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த காட்சன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஊர் திரும்பினார். அதன் பிறகு அவர் சென்னையில் மனைவியுடன் தங்கி வருகிறார். இதனால் கல்லுக்கூட்டத்தில் உள்ள வீட்டை ஆலங்கோட்டில் வசிக்கும் அவரது உறவினர் சேகர் (50) கண்காணித்து வந்தார்.
திருட்டு
இந்தநிலையில் கடந்த 9-ந் தேதி மதியம் காட்சனின் வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் உள்ளே சென்று பார்த்த போது மாடியில் 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு துணிமணிகள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 16 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.23 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
பின்னர் இந்த திருட்டில் துப்பு துலக்க குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமன் தலைமையிலும், இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தலைமையிலும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
வாலிபர் கைது
இந்தநிலையில் குளச்சல் போலீசார் நேற்று செம்பொன்விளையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமாக வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
இதில் குளச்சல் வெள்ளியாகுளம் பனவிளையை சேர்ந்த சிவா (23) என்பதும், அவர் காட்சன் வீட்டில் கதவை உடைத்து நகை, பணம் திருடியதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 4 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் அங்கன்வாடி ஊழியர் ஒருவரின் வீட்டில் சிவா செல்போனை திருடியது அம்பலமானது. அந்த செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் போலீசார் சிவாவை கைது செய்து இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.