கூடுதலாக 10 ரூபாய் கேட்டதால் டாஸ்மாக் கடை மீது மதுபாட்டில் வீசி ரகளை


கூடுதலாக 10 ரூபாய் கேட்டதால் டாஸ்மாக் கடை மீது மதுபாட்டில் வீசி ரகளை
x
தினத்தந்தி 2 Aug 2023 12:15 AM IST (Updated: 2 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நெய்வேலி அருகே கூடுதலாக 10 ரூபாய் கேட்டதால் டாஸ்மாக் கடை மீது காலி மதுபாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்ட அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்

நெய்வேலி:

நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மகன்களான சுகுமார்(வயது 35), வின்சென்ட் (40) ஆகிய 2 பேரும் சம்பவத்தன்று நெய்வேலி அருகே அம்மேரி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மதுபாட்டில் வாங்க சென்றனர். அப்போது அங்கு பணியில் இருந்த விற்பனையாளர் மதுபாட்டில் விலையை விட கூடுதலாக 10 ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அண்ணன்-தம்பி இருவரும் கடை விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், கீழே கிடந்த காலி மதுபாட்டில்களை எடுத்து டாஸ்மாக் கடை மீது வீசி ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த டாஸ்மாக் கடை ஊழியர்கள் இதுபற்றி நெய்வேலி தெர்மல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரகளையில் ஈடுபட்ட அண்ணன்-தம்பியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story