14 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊருக்கு திரும்ப இருந்தவர் திடீர் சாவு

14 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊருக்கு திரும்ப இருந்தவர் திடீரென இறந்தார்.
பெரம்பலூர் மேட்டுத்தெருவை சேர்ந்த ரெங்கசாமியின் மனைவி ராசாத்தி (வயது 60). இவர் தனது மகள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கண்ணீர் மல்க கலெக்டர் கற்பகத்திடம் ஒரு மனு கொடுத்தார். அதில், எனது மகன் சங்கர்(40) கடந்த 2008-ம் ஆண்டு துபாய் அபுதாபியில் தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றார். 14 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு வருவதாக சங்கர் கூறியிருந்தார். ஆனால் அவர் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்து அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தில் கேட்டபோது சங்கர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சங்கர் சாவில் சந்தேகம் உள்ளது. மேலும் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். சங்கர் சொந்த ஊருக்கு வந்ததும், அவருக்கு வீடு கட்டி கொடுத்து, திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசையில் அவரது குடும்பத்தினர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.