மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி


மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி
x

ஊட்டியில் கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி கொத்தனார் பலியானார்.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டியில் கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி கொத்தனார் பலியானார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மின்சாரம் தாக்கியது

நீலகிரி மாவட்டம் ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதி கட்டிடத்தை பழுது பார்க்கும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. ஊட்டி நொண்டிமேடு பகுதியை சேர்ந்தவர் கொத்தனார் ஆறுமுகம் (வயது 55) மற்றும் தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். விடுதி 2-வது மாடியில் கான்கிரீட் கம்பிகளை எடுத்து வைத்தனர்.

ஆறுமுகம் கான்கிரீட் கம்பியை மேலே தூக்கி திருப்பி வைக்க முயன்றார். அப்போது அருகே சென்ற உயர்மின்னழுத்த மின்கம்பிகள் மீது கான்கிரீட் கம்பி பட்டது. இதனால் கம்பியில் மின்சாரம் பாய்ந்து ஆறுமுகத்தை தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதை பார்த்த சக தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவர்கள் ஆறுமுகத்தை மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

போலீசார் விசாரணை

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி நகர மேற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தங்கும் விடுதி உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி கொத்தனார் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story