போக்சோ வழக்கில் தேடப்பட்டு வந்த வாலிபர் தூக்கு போட்டு சாவு


தினத்தந்தி 11 Nov 2022 12:15 AM IST (Updated: 11 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே போக்சோ வழக்கில் தேடப்பட்டு வந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள மூவாநல்லூரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 32). இவர் நெல் கதிரடிக்கும் எந்திரம் டீலர்ஷிப் எடுத்து தொழில் செய்து வந்தார். இவர் நேற்று முன் தினம் தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவரது அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் விடுதி ஊழியர்கள் புதுக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சுரேஷ் தூக்கு போட்டு இறந்த நிலையில் கிடந்தார். உடனடியாக போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சுரேஷ் மீது மன்னார்குடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து தேடி வந்தார்களாம். இதனால் அவர் தலைமறைவாகி புதுக்கோட்டைக்கு வந்து தங்கி உள்ளார். தொடர்ந்து மனம் உடைந்து காணப்பட்ட அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story