சாமியார் வேடத்தில் சுற்றித்திரிந்த வியாபாரி கைது
குஜிலியம்பாறை அருகே நடந்த ஜல்லிக்கட்டு வீரர் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். சாமியார் வேடத்தில் சுற்றித்திரிந்த வியாபாரியை போலீசார் மடக்கி பிடித்தனர்.
ஜல்லிக்கட்டு வீரர் கொலை
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தில் கொல்லப்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி குட்டை ஒன்று உள்ளது. இந்த குட்டையில், கடந்த பிப்ரவரி மாதம் 9-ந்தேதி இரவு ஆண் பிணம் ஒன்று மிதந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த குஜிலியம்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குட்டையில் மிதந்தவரின் உடலை மீட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர், திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்த ஜல்லிக்கட்டு வீரர் மணி (வயது 23) என்றும், அவரை கை, கால் மற்றும் வாயை கட்டி குட்டையில் வீசி கொலை செய்திருப்பது தெரியவந்தது.
கள்ளத்தொடர்பு
இந்த கொலை சம்பவம் தொடர்பாக கருங்குளத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி (47), அவரது மகன் பரத்ராஜ் (19), சுரேஷ் (42) மற்றும் கருங்குளத்தை சேர்ந்த மூக்காயி (33) ஆகிய 4 பேரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர்.
பாலசுப்பிரமணி, முக்காயிக்கு கடன் கொடுத்திருந்தார். அந்த கடனை வசூலிக்க மணியை அனுப்பினார். அப்போது மணிக்கும், மூக்காயிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த பாலசுப்பிரமணி, அவரது மகன் பரத்ராஜ், உறவினர் சுரேஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து மணியை ஒரு வேனில் கடத்தினர். பின்னர் கோட்டாநத்தத்தை சேர்ந்த மளிகை கடைக்காரர் கொடியரசு (55) வீட்டில் வைத்து அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இதில் மயங்கிய மணியை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி வேனில் வைத்து குஜிலியம்பாறை அருகே கொல்லப்பட்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரி குட்டையில் வீசி கொன்றதாக போலீசில் அளித்த வாக்குமூலத்தில் அவர்கள் கூறியிருந்தனர்.
சாமியார் வேடம்
இதற்கிடையே இந்த கொலை வழக்கு தொடர்பாக, கொடியரசை போலீசார் தேடி வந்தனர். அவருடைய செல்போன் எண் சிக்னலை போலீசார் துருப்புசீட்டாக வைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அதில் அவர் செல்போனின் செயல்பாடு, ஆந்திர மாநிலம் காளகஸ்தி பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து குஜிலியம்பாறை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
காளகஸ்தி கோவில் பகுதியில் காவி வேட்டி-சட்டை அணிந்து சாமியார் வேடத்தில் சுற்றித் திரிந்த கொடியரசை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை குஜிலியம்பாறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
விசாரணைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, திண்டுக்கல் மாவட்ட சிறையில் நீதிமன்ற காவலில் போலீசார் அடைத்தனர். ஜல்லிக்கட்டு வீரர் கொலை வழக்கில், இதுவரை மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.