7 கிராமங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டும் பணி


7 கிராமங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டும் பணி
x

காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் 7 கிராமங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டும் பணியை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல்

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள்

ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அனுமந்தராயன்கோட்டை, மயிலாப்பூர், ஆவரம்பட்டி, குட்டத்துபட்டி, கோனூர், தர்மத்துப்பட்டி, சுரக்காய்பட்டி ஆகிய 7 கிராமங்களில் புதிதாக காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்காக அந்த கிராமங்களில் தலா ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டுவதற்கு ரூ.2 கோடியே 24 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மேல்நிலை நீர்த்தேக்க ெதாட்டிகள் கட்டுவதற்கான பூமிபூஜை அந்தந்த கிராமங்களில் நேற்று நடந்தது. இதற்கு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமை தாங்கினார். மேலும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டும் பணியை அவர் தொடங்கி வைத்தார்.

2 மாதங்களில் குடிநீர் வினியோகம்

விழாவில் பங்கேற்ற அமைச்சர், அனைத்து ஊர்களிலும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இதனையடுத்து அமைச்சர் இ.பெரியசாமி பேசும்போது, ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் ரூ.213.98 கோடி மதிப்பில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அனைத்து பணிகளும் இன்னும் 2 மாதங்களில் முடிவடைந்து குடிநீர் வினியோகம் செய்யப்படும். அனைத்து ஊராட்சிகளிலும் சேதமடைந்த தார்சாலைகள் சீரமைக்கப்படும். புதிதாக தார்சாலை அமைக்கப்படும். மின்விளக்குகள் பொருத்தப்படும்.

தமிழக அரசின் முதியோர் ஓய்வூதியம் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் 94 லட்சம் குடும்பத்தினர் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

தேர்தல் வாக்குறுதிகள் மட்டுமின்றி, சொல்லாத பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம் என்றார்.

கலந்து கொண்டோர்

பூமி பூஜை நிகழ்ச்சிகளில் தி.மு.க. மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, ரெட்டியார்சத்திரம் ஒன்றியக்குழு தலைவர் சிவகுருசாமி, மாவட்ட நிர்வாக பொறியாளர் பிச்சாண்டி, அனுமந்தராயன்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா இன்பராஜ், துணைத்தலைவர் மகாலட்சுமி சதீஷ்குமார், கோனூர் ஊராட்சி மன்ற தலைவர் வெள்ளத்தாய் தங்கபாண்டியன், துணைத்தலைவர் ஜோதி முருகன், குட்டத்துப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வேல்கனி அரிச்சந்திரன், துணைத் தலைவர் விசுவாசம் அருளப்பன், மாவட்ட கவுன்சிலர் ஆரோக்கிய சுதாசெல்வி ராஜா, ஒன்றிய கவுன்சிலர்கள் திருப்பதி, சுமதி கணேசன், ரமேஷ், ராஜாமணி, மலைச்சாமி, ஜஸ்டின், தி.மு.க. பொறுப்பாளர்கள் விவேகானந்தன், குமரேசன், பாலம் பாண்டி, ராஜேஷ் பெருமாள், குட்டத்துப்பட்டி சின்னவர், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதா, திருமலைசாமி, ஊராட்சி செயலாளர்கள் பிலவேந்திரன், காளிமுத்து ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story