ஓட்டல்களில் சுகாதார துறையினர் அதிரடி சோதனை


ஓட்டல்களில் சுகாதார துறையினர் அதிரடி சோதனை
x

நெல்லையில் ஓட்டல்களில் சுகாதார துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

திருநெல்வேலி

நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழந்ததன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் சவர்மா மற்றும் புரோட்டா கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர். நெல்லை டவுன் பகுதியில் உள்ள புரோட்டா கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் கெட்டுப்போன இறைச்சிகள் கிலோ கணக்கில் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கெட்டுப்போன 10 கிலோ கோழி இறைச்சி, 15 கிலோ புரோட்டா அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு பினாயில் (கிருமிநாசினி) ஊற்றி அழிக்கப்பட்டது. தொடர்ந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய கெட்டுப்போன இறைச்சிகளை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு தலா ரூ.500 வீதம் அபராதமும் விதிக்கப்பட்டது.

களக்காடு நகராட்சி பகுதியில், அசைவ ஓட்டல்களில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் முத்துராமலிங்கம் தலைமையில் மேற்பார்வையாளர் வேலு மற்றும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அங்கு உணவு தயாரிக்கும் இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. சவர்மா, சிக்கன், மட்டன் போன்ற உணவுகளை, தயார் செய்கின்ற அன்றே விற்பனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் உணவக உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கினர், மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த கடைகளுக்கு ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.


Next Story