அசகளத்தூர் மருந்தகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
கருக்கலைப்பு செய்த இளம்பெண் சாவை அடுத்து அசகளத்தூரில் உள்ள மருந்தகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஐ.டி.ஐ. படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த மருந்தக உரிமையாளரை போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
கண்டாச்சிமங்கலம்
கருக்கலைப்பு
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கீழக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மனைவி அமுதா(வயது 27). ஏற்கனவே 2 பெண் குழந்தை உள்ள நிலையில் 3-வதாக கர்ப்பம் அடைந்த அமுதா பரிசோதனைக்காக தியாகதுருகம் அருகே அசகளத்தூரில் உள்ள தனியார் மருந்தகத்துக்கு சென்றார்.
அங்கு கருவியின் மூலம் அமுதாவின் வயிற்றில் இருப்பது பெண் சிசு என தெரியவந்ததையடுத்து அவரது விருப்பத்தின் பேரில் கருவை கலைப்பதற்காக மருந்தகத்தில் மாத்திரைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து நிராமணியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்ற அமுதாவுக்கு ரத்தப்போக்கு இருந்ததால் அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக வேப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.
சுகாதாரத்துறையினர் ஆய்வு
இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் பாலச்சந்தர், தேசிய சுகாதார குழும மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் அசகளத்தூர் கிராமத்தில் அமுதாவுக்கு கருக்கலைப்பு செய்ததாக கூறப்பட்ட மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மருந்தகத்தில் மருத்துவம் பார்க்கப்படுகிறதா? கருக்கலைப்பு செய்யப்பட்டதா? கருக்கலைப்பு செய்வதற்கான உபகரணங்கள் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
ஐ.டி.ஐ. படித்துவிட்டு
இதில் கள்ளக்குறிச்சி அருகே விளாந்தாங்கல் பகுதியை சேர்ந்த அன்பழகன் மகன் வடிவேல்(45) என்பவர் அமுதாவுக்கு ஸ்கேன் செய்து பார்த்து கருக்கலைப்பு மாத்திரை வழங்கியதாக கூறப்படுகிறது.
ஐ.டி.ஐ. படித்துள்ள இவர் அனுமதியின்றி மருந்தகம் நடத்தியதும், கடந்த செப்டம்பர் மாதம் மலைக்கோட்டாலம் பகுதியில் அனுமதியின்றி கருகண்டறியும் மற்றும் கருகலைப்பு மையம் நடத்தியது தொடர்பாக போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்து விருகாவூர், மலைக்கோட்டாலம், இந்திலி ஆகிய பகுதிகளில் இதேபோல் மருந்தகங்களுக்கு சென்று மருத்துவம் பார்த்து வருவதும் தெரியவந்தது.
கைது
இது குறித்து அமுதாவின் கணவர் கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் மருந்தக உரிமையாளர் வடிவேலுவை வேப்பூர் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வடிவேல் மீது கள்ளக்குறிச்சி, வரஞ்சரம், சின்னசேலம் ஆகிய போலீஸ் நிலையங்களில் கருக்கலைப்பு செய்ததாக ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.