சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x

பாளையங்கோட்டையில் சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருநெல்வேலி

பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கம் சார்பில் பாளையங்கோட்டையில் உள்ள சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

8 ஆண்டுகளுக்கு மேலாக சுகாதார ஆய்வாளர் நிலை-2 ஆக பணிபுரிந்து வருவோரை ஆய்வாளர் 1-வது நிலைக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். டெங்கு, வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் களத்தில் அந்த நோய்களை கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள சுகாதார ஆய்வாளர் நிலை-2 பணியிடத்தில் பயிற்சி முடித்து எம்.டி.எம். சுகாதார ஆய்வாளர்களாக பணிபுரிந்து வருபவர்களை வரையறுக்கப்பட்ட ஊதியத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க நெல்லை மாவட்ட தலைவர் ரகுபதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராமசாமி கோரிக்கை குறித்து விளக்கினார். மாநில தலைவர் கங்காதரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

இதில் மாவட்ட இணை செயலாளர் முருகன், தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளர் அலுவலர் சங்கம் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் நல சங்கம் பாலசுப்பிரமணியன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சங்கம் அக்பர் அலி, வணிகவரித்துறை அலுவலர் சங்கம் கற்பகம், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில துணைத் தலைவர் குமாரவேல், மாவட்ட தணிக்கையாளர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story