அனைத்து மாவட்டங்களிலும் சுகாதார நடைபயிற்சி சாலை
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சுகாதார நடைபயிற்சி சாலை அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி:
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சுகாதார நடைபயிற்சி சாலை அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நடைபயணம்
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் 'நடப்போம் நலம் பெறுவோம்' என்ற திட்டத்தின் அடிப்படையில் கன்னியாகுமரியில் நேற்று அதிகாலை நடை பயணம் நடந்தது.
இதில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் ஸ்ரீதர், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டு நடைபயணம் மேற்கொண்டனர்.
அந்த சமயத்தில் கன்னியாகுமரி சூரிய அஸ்தமன பகுதியில் இருந்து நான்குவழிச்சாலையில் 8 கிலோ மீட்டர் தூரம் நடை பயிற்சி மேற்கொள்வதற்கான நடை பாதையை தேர்வு செய்து உறுதிப்படுத்துவதற்கான ஆய்வும் நடத்தப்பட்டது.
சுகாதார நடைபயிற்சி சாலை
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடப்போம் நலம் பெறுவோம் என்ற திட்டமானது வெகுவிரைவில் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட உள்ளது. ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் சுகாதார நடைபயிற்சி மேற்கொள்வதற்கென்று சாலை உள்ளது.
அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைபயிற்சிக்கான சாலை தேர்வு செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே மக்கள் நல்வாழ்வு துறையின் நிதிநிலை அறிக்கையில் இந்த திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இருபுறமும் மரங்கள் நடப்படும்
இந்த பாதையின் இரு புறங்களிலும் மரங்கள் நடுவது, 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு இடத்தில் இருக்கைகள் அமைப்பது, அதோடு மட்டுமல்லாமல், நடப்பதனால் கிடைக்கும் பயன்கள் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் ஆங்காங்கே நிறுவப்பட உள்ளது.
இந்த இடத்தை கடந்து செல்பவர்கள் நாமும் நடக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இந்த சாலையை பொருத்தவரை ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையும் மாவட்ட மக்கள் நல்வாழ்வுத் துறையை சேர்ந்த அலுவலர்கள் சுகாதார மருத்துவ முகாம் ஒன்றை நடத்துவார்கள். இதில் சர்க்கரை நோய், ரத்த அழுத்த பரிசோதனை நடத்தப்படும்.
மேலும் முகாமில் நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு குடிநீர், வாழைப்பழம் போன்றவை இலவசமாக வழங்கப்படும். இதற்கான திட்டமிடலை மாவட்ட நிர்வாகமும், மக்கள் நல்வாழ்வு துறையும் இணைந்து மேற்கொள்ள உள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விரைவில் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் இளையராஜா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.