உதவி கலெக்டரிடம் சுகாதார பணியாளர்கள் மனு
பத்தமடையில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி உதவி கலெக்டரிடம் சுகாதார பணியாளர்கள் மனு கொடுத்தனர்.
சேரன்மாதேவி:
பத்தமடை பேரூராட்சி அம்பேத்கர் 1-வது தெருவில், பேரூராட்சியில் பணிபுரியும் சுகாதார பணியாளர்களுக்காக 1973-ம் ஆண்டு புதிய குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டது. அந்த குடியிருப்பு வீடுகளை அப்போதைய உதவி கலெக்டர், பணியாளர்களுக்கு ஒப்படைத்தார். சுமார் 50 ஆண்டு காலமாக அந்த வீடுகளில் வசித்து வரும் சுகாதார பணியாளர்கள் வீட்டுக்கு வாடகையாக மாதம்தோறும் பேரூராட்சி அலுவலகத்தில் பணம் கட்டி வருகின்றனர். இந்நிலையில் அந்த குடியிருப்பு பகுதியில் நடைபாதையை ஆக்கிரமித்து தனிநபர் ஒருவர் தகர சீட்டுகள் வைத்து அடைத்து இடையூறு செய்வதாக சுகாதார பணியாளர்கள் பத்தமடை செயல் அலுவலரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக பேரூராட்சி செயல் அலுவலர் தனபால், சேரன்மாதேவி தாசில்தாருக்கு ஆக்கிரமிப்பை அகற்றி தரக்கோரி கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் சுகாதார பணியாளர்கள் சேரன்மாதேவி உதவி கலெக்டர் அலுவலகத்தில் இதுதொடர்பாக கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட உதவி கலெக்டர் ரிஷாப், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.