பத்திரப்பதிவு கட்டண உயர்வு குறித்து கருத்து கேட்பு கூட்டம்: சென்னையில் இன்று நடக்கிறது
பத்திரப்பதிவு கட்டண உயர்வு குறித்து கருத்து கேட்பு கூட்டம் சென்னையில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.
சென்னை,
பதிவுத்துறைக்கான கட்டணம் கடந்த 10-ந் தேதி திடீரென்று உயர்த்தப்பட்டது. அதன்படி, செட்டில்மெண்ட், பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கான அதிகப்பட்ச பதிவு கட்டணம் ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது. முத்திரை தீர்வு ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாகவும், தனி மனை பதிவுக்கான கட்டணம் ரூ.200-ல் இருந்து ஆயிரம் ரூபாய் ஆகவும் உயர்ந்தது.
செட்டில்மெண்ட் பத்திரத்தை பதிவு செய்ய, 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்பது, பொது மக்களை கடுமையாக பாதிக்கும் என்பதால், செட்டில்மெண்ட் பத்திரத்துக்கான கட்டண உயர்வை பழைய கட்டணத்திற்கே அரசு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தது. மேலும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத அதிகார ஆவணங்களுக்கு பதிவு கட்டணம் ரூ.10 ஆயிரம் என்று உள்ளதை சொத்தின் சந்தை மதிப்புக்கு ஒரு சதவீதம் என்ற அளவில் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
இன்று நடக்கிறது
பதிவுத்துறையில் உயர்த்தப்பட்ட கட்டணத்திற்கு பொதுமக்கள் மத்தியிலும், மனை, கட்டிட நிறுவனங்கள் மத்தியிலும் அதிருப்தி நிலவியது. கட்டண உயர்வை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இதைத்தொடர்ந்து பதிவுத்துறை சார்பில் பொதுமக்கள், மனை, கட்டிட நிறுவனங்கள் பிரதிநிதிகளுடன் கருத்து கேட்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கான கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இதில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி, பதிவுத்துறையின் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்பட அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். இந்த கூட்ட முடிவில் பத்திரப்பதிவு கட்டணங்கள் உயர்த்தப்பட்டதில் தளர்வு வருமா? அல்லது அதே நிலையே நீடிக்குமா? என்பது போகபோகத்தான் தெரியும்.
இதுகுறித்து பத்திரப்பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறும்போது, 'சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் கட்டிடம், மனை விற்பனை தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து கூட்டமைப்புகள், சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்று கருத்து தெரிவிக்கலாம். அவர்களின் நேரடி குறைகளை தீர்த்து அதற்கேற்ப பதிவுத்துறை நவீனப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.