சொர்க்க வாசல் திறப்பு ஆலோசனை கூட்டம்
உத்திரங்கநாத சுவாமி கோவில் சொர்க்க வாசல் திறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதசுவாமி கோவிலில் வருகிற 2-ந் தேதி காலை 6 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு விழாநடை பெற உள்ளது. இந்த நிலையில் விழா குறித்து ஆலோசனைக் கூட்டம் கோவில் வளாகத்தில் நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு கோவில் செயல் அலுவலர் நரசிம்மமூர்த்தி தலைமை தாங்கினார். அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கருணாகரன், மண்டல துணை தாசில்தார் சுதா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி கலந்துகொண்டு விழா நடத்துவது குறித்து பொதுமக்களிடமிருந்து கருத்துக்களை கேட்டார்.
பின்னர் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆயிரக் கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குற்ற செயல்களை தடுக்க கோவில் வளாகத்தை சுற்றி 30-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். சாமி வீதி உலா வரும்போது மின் வயர்களை அப்புறப்படுத்த வேண்டும், குண்டு குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பேரூராட்சி நிர்வாகம் செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வருவாய்த்துறை, மின்வாரியத் துறை, உள்ளாட்சித் துறை பேரூராட்சி நிர்வாகம், தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை, உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.