கொடைக்கானல் மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ; தீயை அணைக்க வனத்துறையினர் போராட்டம்


கொடைக்கானல் மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ; தீயை அணைக்க வனத்துறையினர் போராட்டம்
x
தினத்தந்தி 28 Feb 2023 2:00 AM IST (Updated: 28 Feb 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் அருகே மலைப்பகுதியில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க வனத்துறையினர் போராடி வருகின்றனர்.

திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே மலைப்பகுதியில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க வனத்துறையினர் போராடி வருகின்றனர்.

சுட்டெரிக்கும் வெயில்

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் வேளையில் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதன் காரணமாக மலைப்பகுதியில் உள்ள செடி, கொடிகள், புல்வெளி பகுதிகள் காய்ந்தும், கருகியும் வருகின்றன. அவ்வாறு காய்ந்துபோன செடி, கொடிகள் மற்றும் மரங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஆங்காங்கே வனப்பகுதி மற்றும் தனியார் தரிசு நிலங்கள், வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலங்களில் அடுத்தடுத்து தீப்பற்றி எரிந்தது. இருப்பினும் வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு, தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.

பயங்கர தீ

இந்தநிலையில் கொடைக்கானல் அருகே பழனி மலைப்பாதையில் பி.எல்.செட் அருகே மலைப்பகுதியில் வருவாய்த்துறைக்கு ெசாந்தமான நிலம் மற்றும் தனியார் தோட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு தீப்பிடித்தது. கொழுந்துவிட்டு எரிந்த காட்டுத்தீ, அடுத்தடுத்து உள்ள பகுதிகளிலும் வேகமாக பரவி பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இரவு நேரத்தில் தீப்பற்றி எரிந்த பகுதி முழுவதும் செந்நிறத்தில் காட்சியளித்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் தீ நேற்று இரவு வரை கட்டுக்குள் வரவில்லை. இருப்பினும் தீ மேலும் பரவாமல் தடுக்கும் பணியில் வனத்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் கொடைக்கானல் அருகே புலியூர், வில்பட்டி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் உள்ள மலைப்பகுதியிலும் நேற்று முதல் தீப்பிடித்து எரிந்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளும் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

கொடைக்கானல் மலைப்பகுதியில் தனியார் நிலங்களில் சிலர் வைக்கும் தீ, காற்றின் வேகம் காரணமாக அவ்வப்போது வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலங்களிலும், வனப்பகுதிகளுக்கும் பரவி அங்குள்ள மரம், செடி, கொடிகளில் பற்றி எரியும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

எனவே வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து, தனியார் நிலங்களில் அனுமதியின்றி தீ வைக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story