காட்சிமுனைகளில் கடும் பனிமூட்டம்
குன்னூரில் மழை பெய்வதால் காட்சிமுனைகளில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் இயற்கை காட்சிகளை ரசிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.
குன்னூர்
குன்னூரில் மழை பெய்வதால் காட்சிமுனைகளில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் இயற்கை காட்சிகளை ரசிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.
2-வது சீசன்
மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் இயற்கை எழிலுக்கு பஞ்சமில்லை. இங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க வெளிமாவட்ட, வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.
தற்போது நீலகிரி மாவட்டத்தில் 2-வது சீசன் நிலவி வருகிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகள் வருைக அதிகரித்து உள்ளது. அவர்கள் சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பதோடு புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். இதற்கிடையில் சில நேரங்களில் மழை பெய்து வருவதால், சுற்றுலா பயணிகள் அவதியடைகின்றனர்.
காட்சிமுனைகள்
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தின் தலைநகரான ஊட்டிக்கு அடுத்தப்படியாக சுற்றுலா தலங்கள் அதிகம் உள்ள பகுதி, குன்னூர் ஆகும். இங்கு சிம்ஸ் பூங்கா, லேம்ஸ்ராக் காட்சிமுனை, டாஸ்பின் நோஸ் காட்சிமுனை ஆகியவை உள்ளன.
இதில் காட்சிமுனைகளை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்படுகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக குன்னூர் பகுதியில் இரவில் மழையும், பகலில் பனிமூட்டமும் உள்ளது.
ஏமாற்றம்
இதன் காரணமாக சிம்ஸ் பூங்காவை கண்டு ரசித்துவிட்டு காட்சிமுனைகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, குன்னூரில் உள்ள காட்சிமுனைகளில் இருந்து இயற்கை காட்சிகளை பார்க்கும்போது மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரும். ஆனால் கடும் பனிமூட்டம் காரணமாக காட்சிமுனைகளில் நின்று இயற்கை காட்சிகளை ரசிக்க முடியவில்லை. இது ஏமாற்றம் அளிக்கிறது என்றனர்.