குமரி ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு


குமரி ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக வடமாநிலங்களில் வன்முறை நடைபெறுவதை தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக குமரி மாவட்ட ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக வடமாநிலங்களில் வன்முறை நடைபெறுவதை தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக குமரி மாவட்ட ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

'அக்னிபத்' திட்டம்

ராணுவத்தில் ஆள் சேர்க்க 'அக்னிபத்' என்ற புதிய திட்டத்தை கடந்த 14-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தில் 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பீகார் மாநிலத்தில் 2 ரெயில்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.

மேலும் உத்தரபிரதேச மாநிலம் பல்லியாவில் ஒரு ரெயிலுக்கு தீ வைத்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. எனவே போராட்டம் மேலும் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. குறிப்பாக ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு

முக்கியமாக தமிழகத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதே போல குமரி மாவட்டத்திலும் ரெயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. நாகர்கோவில், கன்னியாகுமரி, இரணியல், குழித்துறை உள்ளிட்ட அனைத்து ரெயில் நிலையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் ரெயில் நிலையத்தில் கூட்டம் கூடாமல் கண்காணித்ததுடன் தண்டவாள பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். பயணிகளையும், அவர்களது உடமைகளையும் தீவிர சோதனை நடத்தினர். மேலும் நடைமேடைகளில் அவ்வப்போது ரோந்து சுற்றி வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story