நெல்லை கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
பல்வேறு கொலை வழக்கு விசாரணை தொடர்பாக நெல்லை கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்த முத்துமனோ என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு பாளையங்கோட்டை சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு நேற்று நெல்லை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதேபோல் கடந்த 2010-ம் ஆண்டு கடையம் அருகே ஆள்மாறாட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. 2021-ம் ஆண்டு முன்னீர்பள்ளத்தில் நடந்த பழிக்குப்பழி கொலை வழக்கு, பாளையங்கோட்டை சீவலப்பேரியில் நடந்த கொலை வழக்கு என 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் நேற்று நெல்லை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
இதையொட்டி இந்த வழக்குகளில் தொடர்புடையவர்கள் கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையொட்டி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் உத்தரவின் பேரில் துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் தலைமையில் கோர்ட்டு வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.