வேலூர் கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
ரம்ஜான் பண்டிகையையொட்டி வேலூர் கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
வேலூர் கோட்டையில் உள்ள மசூதியில் ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்த வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் கோட்டை நுழைவு வாயில், வளாகம் மற்றும் அங்குள்ள கோட்டை சுவர் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோட்டையின் நுழைவு வாயில் முன்பு காந்தி சிலை அருகே இரும்பு கம்பிகளால் (பேரிகார்டு) போலீசார் தடுப்புகள் அமைத்தனர். முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கோட்டைக்குள் ஆட்டோ, கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. வாகனங்களை காந்திசிலை அருகே நிறுத்தி விட்டு சுற்றுலா பயணிகள், ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு வந்த பொதுமக்கள் கோட்டைக்குள் சென்றனர்.
அனைவரையும் போலீசார் சோதனைக்கு உட்படுத்திய பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர். விடுமுறையையொட்டி கோட்டையை சுற்றிப்பார்க்கவும், பூங்காவில் அமர்ந்து பொழுதை போக்கவும் குடும்பத்துடன் பலர் வருகை தந்தனர். கோட்டைக்கு வந்த சில காதல் ஜோடிகள் போலீசாரை கண்டதும் திரும்பி சென்று விட்டனர். இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்கள் வாகனத்தை வெளியே நிறுத்தி விட்டு கோட்டைக்குள் செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர்.