காரைக்குடி, தேவகோட்டையில் பலத்த மழை


காரைக்குடி, தேவகோட்டையில் பலத்த மழை
x

காரைக்குடி மற்றும் தேவகோட்டை பகுதியில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி மற்றும் தேவகோட்டை பகுதியில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

பலத்த மழை

சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாக வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. ஒரு சில இடங்களில் மட்டும் அவ்வப்போது மழை பெய்து வந்தது. இந்நிலையில் காலை காரைக்குடி, கல்லல், தேவகோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் வழக்கம் போல் காலையில் வெயில் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

பின்னர் மாலை 4 மணிக்கு திடீரென வானம் மேகமூட்டமாக காட்சியளித்து பலத்த மழை பெய்ய தொடங்கியது. தேவகோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய மழை ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது. இதனால் தாழ்வான பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் முழங்கால் அளவு தண்ணீர் சென்றதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதியடைந்தனர்.

குளுமையான சூழல்

இதேபோல் காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியிலும், கல்லல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியிலும் மாலை 4.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை 2 மணி நேரத்திற்கும் மேல் தொடர்ந்தது. இதனால் பல பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் முடியும் வேளையில் பலத்த மழை பெய்ததால் மாணவர்கள், அரசு அலுவலர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் மழையில் நனைந்தபடியே மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

இந்த மழை காரணமாக இரவு முழுவதும் குளுமையான சூழ்நிலை காணப்பட்டது. இதனால் காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.



Next Story