தஞ்சையில் பலத்த மழை


தஞ்சையில் பலத்த மழை
x

தஞ்சையில் நேற்று பகலில் கோடை வெயில் சுட்டெரித்த நிலையில் இரவில் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காலநிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சையில் நேற்று பகலில் கோடை வெயில் சுட்டெரித்த நிலையில் இரவில் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காலநிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோடை வெயில்

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்த வண்ணம் உள்ளது. கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் 100 டிகிரிக்கும் குறையாமல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் காணப்படுகிறது.பகலில் சாலைகளில் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் சாலையில் மக்கள் நடமாட்டம் குறைந்து வருகிறது. பகலில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது என்றால் இரவிலும் அதன் தாக்கம் குறையவில்லை. வீடுகளில் மின் விசிறிகளில் இருந்து கூட அனல் காற்று தான் வீசி வருகிறது.

திடீர் மழை

நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் இரவு 7.45 மணி அளவில் இடி- மின்னல் காணப்பட்டது. அதனைத்தொடர்ந்து மழை பெய்யத்தொடங்கியது. 1 மணி நேரம் இடைவிடாது மழை கொட்டியது. இந்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது.இதன் காரணமாக வெளியே சென்று இருந்தவர்கள் மழையில் நனைந்தபடியே வீடு திரும்பினர். 1 மணி நேரம் மழை பெய்ததால் இரவில் வெப்பம் தணிந்து குளிர் நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் தற்போது தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் குறுவை சாகுபடிக்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மழை பெய்து வருவது விவசாயிகளிடையேயும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வல்லம்

வல்லம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. அனல் காற்றுடன் மதியம் வெப்பம் அதிகரித்து தொடர்ந்ததால் பொது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் நேற்று இரவு 7.30 மணி அளவில் பலத்த இடி- மின்னலுடன் வல்லம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. கனமழை கொட்டி தீர்த்ததால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. வல்லம், ஆலங்குடி, மருத்துவக்கல்லூரி பிரிவு சாலைகளில் தாழ்வான பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

திருக்காட்டுப்பள்ளி

திருக்காட்டுப்பள்ளி மற்றும் பூதலூர் பகுதியில் நேற்று பகல் முழுவதும் வெயில் கொளுத்திய நிலையில் மாலையில் மேகம் திரண்டு குளிர்ந்த காற்று வீசியது. இரவு 7.30 மணியில் இருந்து பலத்த இடி மின்னலுடன் திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் சுற்று வட்டார பகுதிகளில் மழை கொட்டியது. மழைதொடங்கியதும் மின்சாரம் தடைபட்டது. இரவு 9.30 மணி வரை மின்சாரம் வரவில்லை. மழை காரணமாக திருக்காட்டுப்பள்ளியில் மழைநீர் வெள்ளமாக பெருகி ஓடியது. மழை தண்ணீருடன் கழிவு நீரும் கலந்து ஓடியதால் துர் நாற்றம் வீசியது. திருக்காட்டுப்பள்ளி கடைவீதியில் மின்கம்பத்தில் இருந்து ஒரு கடைக்கு செல்லும் மின்சார ஒயர் அறுந்து தொங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைப்போல நாஞ்சிக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான சூரியம்பட்டி, மருங்குளம், மாதா கோட்டை, விளார், புதுப்பட்டினம், ரங்கநாதபுரம், கண்டிதம்ப்பட்டு சொக்கலை, நடுவூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் நேற்று மாலை பலத்த இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்தது.


Next Story