ஒரு மாதத்திற்கு பிறகு குமரி மாவட்டத்தில் மீண்டும் பலத்த மழை
ஒரு மாதத்திற்கு பிறகு குமரி மாவட்டத்தில் மீண்டும் பலத்த மழை பெய்தது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நாகர்கோவில்,
ஒரு மாதத்திற்கு பிறகு குமரி மாவட்டத்தில் மீண்டும் பலத்த மழை பெய்தது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பலத்த மழை
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி நேற்று குமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.
நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை வெயில் வாட்டி வதைத்தது. மதியம் 1 மணிக்கு மேல் வானில் கார்மேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன. 2.30 மணிக்கு சாரலாக தொடங்கிய மழை நேரம் செல்ல கனமழையாக பெய்தது. அந்த வகையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது.
இதனால் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை, கோட்டார், அவ்வை சண்முகம் சாலை, கே.பி.ரோடு, கேப் ரோடு, செட்டிகுளம் சந்திப்பு சாலை, கலெக்டர் அலுவலக சாலை, வடசேரி ஆறாட்டு சாலை, பாலமோர் சாலை, கிருஷ்ணன்கோவில் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதை காண முடிந்தது. இதில் சில இடங்களில் கழிவுநீருடன் மழைநீர் கலந்தபடி சென்றது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில்...
இதேபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றதை காண முடிந்தது. அணைகளின் நீர்ப்பிடிப்பு மற்றும் நீர்வரத்து பகுதிகளான கோதையாறு, மோதிரமலை, கல்லாறு, கிளவியாறு, மாறாமலை, பாலமோர், ஆறுகாணி, பத்துகாணி, கணபதிக்கல் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேலும் திற்பரப்பு, களியல், குலசேகரம், சுருளகோடு, தடிக்காரன்கோணம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. மழையின் காரணமாக பாசன வசதியில்லாத கரையோர பகுதிகளில் நடவு செய்யப்பட்டுள்ள வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களுக்கு தண்ணீர் கிடைத்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மரம் முறிந்தது
பலத்த மழை காரணமாக செருப்பாலூர் கல்லடிமாமூடு- புலியிறங்கி சந்திப்பு இடையே சாலையோரம் நின்ற பழமையான அயனி மரம் ஒன்று சாலையின் குறுக்காக வேருடன் சாய்ந்தது.
இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் இதுபற்றி தகவல் அறிந்ததும் குலசேகரம் பேரூராட்சி தலைவி ஜெயந்தி ஜேம்ஸ், துணைத் தலைவர் ஜோஸ் எட்வர்ட் உள்ளிட்டோர் மரத்தை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். குலசேகரம் தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து வந்து மரம் அறுக்கும் தொழிலாளர்களின் உதவியுடன் மரத்தை அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் 1½ மணி நேரம் போக்குவரத்து வரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் ஒரு சில இடங்களில் மரம் முறிந்து விழுந்தது.
கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது. எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இந்தநிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.