தஞ்சையில் வெளுத்து வாங்கிய கன மழை: 177 மி.மீ. கொட்டியதால் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின


தஞ்சையில் வெளுத்து வாங்கிய கன மழை:  177 மி.மீ. கொட்டியதால் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
x

தஞ்சையில் 177 மி.மீ. மழை கொட்டியதால் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்

தஞ்சையில் 177 மி.மீ. மழை கொட்டியதால் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். தற்போது குறுவை அறுவடை பணிகள் முடிவடைந்து சம்பா, தாளடி நடவுப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நேற்று முன்தினம் தஞ்சை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 3½ மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. இந்த மழை காரணமாக தஞ்சை நகரம் மற்றும் அருகில் உள்ள கிராமங்கள் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

177 மி.மீ. கொட்டியது

தஞ்சை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தாலும் தஞ்சையில் மட்டும் மழை வெளுத்து வாங்கியது. இதில் அதிகபட்சமாக தஞ்சையில் 177 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இந்த கன மழை காரணமாக தஞ்சையை அடுத்த குளிச்சப்பட்டு அருகே நாற்று நட்டு 20 நாட்களே ஆன சம்பா நெற் பயிர்கள் முழுவதும் நீரில் மூழ்கியது.

100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் முற்றிலும் மழை நீரில் மூழ்கியுள்ளதால், இளம் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்த பகுதிகளில் வடிகால் வாய்க்கால் 30 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளதால், ஒவ்வொரு மழைக்காலத்தின் போதும் விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

இது குறித்து விவசாயிகள் ஜெயக்குமார், கண்ணதாசன் ஆகியோர் கூறியதாவது:-

தஞ்சையில் பெய்த கனமழை காரணமாக நடவு செய்யப்பட்டு 20 நாட்களே ஆன சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. மேலும் தொடர் மழை இருப்பதால் இந்த தண்ணீர் வடிய வாய்ப்பில்லை. ஒரு வேளை தண்ணீர் வடிந்தால் கூட பாதிக்கு பாதிதான் தங்களுக்கு பயிரை காப்பாற்ற முடியும்.

தமிழக அரசு இப்பகுதியில் கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் இந்த பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால் 30 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் மழை வெள்ளம் வடிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. வடிகாலை தூர்வாரி இருந்தால் வயல்களில் தண்ணீர் தேங்கி இருக்காது. அவ்வாறு தேங்கி இருந்தாலும் உடனடியாக வடிந்து விடும்.

தூர்வார வேண்டும்

எனவே வடிகால் வாய்க்காலை முறையாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது வரை ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். எனவே பாதிப்புகள் குறித்து கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மெலட்டூர்

தஞ்சை மாவட்டம் மெலட்டூர் அருகே உள்ள கொத்தங்குடி உதாரமங்களம் பகுதியில் சம்பா பருவத்தில் நடவு செய்திருந்த வயல்களில் மழைநீர் தேங்கி, நாற்றுகள் மூழ்கி உள்ளன. இந்த பகுதியில் விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்து நடவு செய்து இருந்தனர். இந்த நிலையில் மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டு இருப்பது விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை கணக்கீட்டு உடனடியாக அரசு உரிய நிவாரண தொகையை வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.


Next Story