கொட்டித்தீர்த்த கனமழையால் குறுவை பயிர்கள் மூழ்கின


கொட்டித்தீர்த்த கனமழையால் குறுவை பயிர்கள் மூழ்கின
x

தஞ்சை அருகே கொட்டித்தீர்த்த கனமழையால் குறுவை பயிர்கள் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை அருகே கொட்டித்தீர்த்த கனமழையால் குறுவை பயிர்கள் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

கனமழை

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மற்றும் பூதலூர் பகுதியில் நேற்று இரவு 3 மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது. பூதலூரில் கொட்டித் தீர்த்த மழையால் பல்வேறு பகுதிகளில் குறுவைப் பயிர்கள் மழை நீரில் மூழ்கின. இளம் நடவுபயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். மரத்தகுடி பகுதியில் அண்மையில் நடவு செய்யப்பட்ட குறுவைப் பயிர்கள் நீரில் மூழ்கின.

பயிர்கள் மூழ்கின

பூதலூர் முனியாண்டவர் கோவில் அருகில் எந்திரங்கள் மூலம் நடவு செய்யப்பட்ட வயல்களிலும் பயிர்கள் மூழ்கின. இளம் பயிர்கள் நீரில் மூழ்கியதால் வளர்ச்சி குன்றி மகசூல் இழப்பு ஏற்படும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்தனர். இதைப்போல கல்லணை முதல் திருக்காட்டுப்பள்ளி வரை பல்வேறு கிராமங்களில் ஆழ்துளை கிணறு தண்ணீரைக் கொண்டு முன்பட்ட குறுவை சாகுபடி செய்திருந்தனர். இவ்வாறு முன்பட்ட குறுவை சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கதிர் விட்டு அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன.இந்த பகுதியில் பெய்த மழையால் சில வயல்களில் சொற்ப அளவுக்கு அறுவடைக்கு தயாரான பயிர்கள் சாய்ந்திருந்தன. தொடர்ந்து மழை பெய்தால் குறுவை அறுவடை செய்வதில் தாமதம் ஏற்படும். வயல்களில் அறுவடை எந்திரங்களை இறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு மகசூல் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

வல்லம்

தஞ்சை அருகே வல்லம், ஆலக்குடி உட்பட சுற்றுப்பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை பெய்த கனமழையால் சுமார் 400 ஏக்கர் அளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு இருந்த வயல்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.புதுக்கல்விராயன் பேட்டை, சித்திரக்குடி, பூதலூர் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ஓரிரு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் மின் தடை ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டனர். இந்த மழையால் இளம் பயிர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.

தஞ்சை மாவட்டம் வல்லம், ஆலக்குடி, சித்திரக்குடி, பூதலூரில் வயல்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் கடந்த 20 நாட்களுக்கு முன்பு நடப்பட்டிருந்த குறுவை இளம் நாற்றுக்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. தொடர்ந்து மழை பெய்தால் நீர் வடியாமல் பயிர்கள் பாதிக்கப்படும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

பாலம் சேதம்

தஞ்சை அருகே வல்லம் - ஆலக்குடி சாலையில் உள்ள பேய்வாரி வாய்க்காலில் புதிய பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் பெய்த கனமழையால் இந்த வாய்க்காலில் தண்ணீர் நிரம்பி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்காலிக பாலமும் சேதமடைந்தது.இதனால் தஞ்சையிலிருந்து வல்லம் ஆலக்குடி வழியாக பூதலூர் செல்லும் பஸ் நிறுத்தப்பட்டது. பள்ளி மாணவ, மாணவிகள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். தற்காலிக பாதையில் தண்ணீர் வடிந்தவுடன் அதை சீரமைக்கும் பணிகள் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. மேலும் அந்த வழியில் இருச்சக்கர வாகனங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. எனவே பாலம் கட்டுமானப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொது மக்கள் தெரிவித்தனர்.


Next Story