கனமழை எதிரொலி:மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
வெள்ளிமலை வனப்பகுதியில் பெய்த கனமழை எதிரொலியாக, மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.
வனப்பகுதியில் கனமழை
கடமலைக்குண்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பகல் நேரத்தில் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். இதே போல கடும் வெயில் காரணமாக மலைப்பகுதியில் உள்ள மரம், புற்கள் அனைத்தும் காய்ந்த நிலையில் காணப்பட்டது. இதனால் பஞ்சம்தாங்கி, மேகமலை ஆகிய மலைப்பகுதிகளில் அடிக்கடி காட்டுத்தீ ஏற்பட்டு வந்தது.
மேலும் வெயில் தாக்கம் காரணமாக விவசாயமும் பாதிப்படைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் வெயிலின் தாக்கம் தணிந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக மூல வைகை ஆறு உற்பத்தியாகும் வெள்ளிமலை வனப்பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
ஆற்றில் நீர்வரத்து
இதன் காரணமாக நேற்று முன்தினம் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. அந்த தண்ணீர் நேற்று காலை வருசநாடு கிராமத்தை வந்தடைந்தது. இதேபோல மேகமலை வனப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக சின்னச்சுருளி அருவியிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வைகை ஆறு மற்றும் சின்னச்சுருளி அருவியில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல மழையின் காரணமாக வனப்பகுதி செழிப்படைந்து காட்டுத்தீ அபாயம் நீங்கியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.