அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூரில் பலத்த மழை


அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூரில் பலத்த மழை
x

அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூரில் பலத்த மழை பெய்தது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூரில் பலத்த மழை பெய்தது.

பலத்த மழை

வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால் விருதுநகர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்தநிலையில் அருப்புக்கோட்டையில் நேற்று காலை முதலே கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் மாலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து புளியம்பட்டி, காந்திநகர், பாலையம்பட்டி, கோபாலபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. கனமழை காரணமாக பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீரோடு கலந்து சாக்கடை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது பெய்த கனமழை விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தூர்

சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கடும் வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர மிகுந்த சிரமப்பட்டனர். இந்த நிலையில் நேற்று காலையும் வழக்கம்போல் வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் மாலையில் 4.30 மணி அளவில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து சாத்தூர், இருக்கன்குடி, நத்தத்துப்பட்டி, சிறுகுளம், கு.சொக்கலிங்கபுரம் குண்டலகுத்தூர், நல்லமநாயக்கன்பட்டி, கோல்வார்பட்டி அணைக்கட்டுப்பகுதி, சிவந்திப்பட்டி, சிவனனைந்தபுரம், புல்வாய்ப்பட்டி, நள்ளி சத்திரம், என்.சுப்பையாபுரம், பெரியஓடைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.

சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை காரணமாக பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மழையால் ஆடிப்பட்டத்தில் விதைத்திருக்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன்கோவில் பகுதிகளில் நேற்று அரை மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை செல்லும் சாலையில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவியது.


Next Story