கூத்தாநல்லூர், திருமக்கோட்டையில் பலத்த மழை
கூத்தாநல்லூர், திருமக்கோட்டையில் பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சில இடங்களில் மரங்கள் சாய்ந்தன.
கூத்தாநல்லூர்;
கூத்தாநல்லூர், திருமக்கோட்டையில் பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சில இடங்களில் மரங்கள் சாய்ந்தன. மேலும் மின்தடையால் மக்கள் அவதிப்பட்டனர்.
பலத்த மழை
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதிகளில், நேற்று காலை முதல் மாலை வரை கடுமையான வெயில் சுட்டெரித்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில், நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதைத்தொடர்ந்து இடி- மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. இதனால், கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், கோரையாறு, ராமநாதபுரம், ஓகைப்பேரையூர், வேளுக்குடி, சித்தனங்குடி, ஓவர்ச்சேரி, தண்ணீர்குன்னம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கியது.
திருமக்கோட்டை
இதைப்போல திருமக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான எளவனூர், கன்னியாகுறிச்சி, பாவாஜிக்கோட்டை, களிச்சாங்கோட்டை, பாளையக்கோட்டை, மேலநத்தம், தென்பரை, வல்லூர், ராதாநரசிம்மபுரம், பைங்காநாடு ஆகிய பகுதிகளில் காலையிலிருந்து கடும் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலை 4 மணிக்கு கரு மேகங்கள் சூழ்ந்து இரவு போல் காட்சி அளித்தது. மாலை 6 மணிக்கு பலத்த மழை சூறாவளிக்காற்றுடன் பெய்ய தொடங்கியது.
மரங்கள் சாய்ந்தன
இதனால் திருமக்கோட்டை கடைத்தெரு, அரசு பள்ளி அருகில் மற்றும் தெற்கு ெதரு பகுதியில் மரங்கள் சாலைகளில் சாய்ந்தன. பலத்த காற்று காரணமாக பனை மரங்களில் இருந்து பனை மட்டைகள் சாலைகள் முழுவதும் விழுந்து கிடந்தன. சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக திருமக்கோட்டை பகுதியில் சுமார் 5 மணி நேரத்துக்கு மேல் மின்தடை ஏற்பட்டது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.இதேபோல வடுவூரிலும் பரவலாக மழை பெய்தது.