திருவாரூர் மாவட்டத்தில் பலத்த மழை


திருவாரூர் மாவட்டத்தில் பலத்த மழை
x

திருவாரூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் வெப்பத்தின் தாக்கம் தணிந்தது.

திருவாரூர்

திருவாரூர்;

திருவாரூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் வெப்பத்தின் தாக்கம் தணிந்தது.

வெயில் தாக்கம்

தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனால் திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பகலில் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனர்.

தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கிய மழை இடி- மின்னலுடன் பலத்த மழையாக கொட்டித்தீர்த்தது. இதனால் திருவாரூர் பகுதியில் சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டது.திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலையிலிருந்து வறண்ட வானிலை நிலவி வந்தது. இந்தநிலையில் திடீரென பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர்பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வந்தது. நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயில் சுட்டெரித்தது. இருப்பினும் மாலை 4.50 மணியளவில் வெயிலோடு சேர்ந்து சிறு சிறு தூறல்களாக மழை பெய்ய தொடங்கியது. இதைத்தொடர்ந்து கருமேகமூட்டம் சூழ்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுமார் 30 நிமிடங்கள் பெய்த பலத்த மழையால் கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், ஓகைப்பேரையூர், ராமநாதபுரம், பழையனூர், நாகங்குடி, பொதக்குடி, பூதமங்கலம், கோரையாறு, திருராமேஸ்வரம், ஓவர்ச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழை தண்ணீர் தேங்கி நின்றது. திடீரென பெய்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. இதைப்போல நீடாமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.நன்னிலம் பகுதியில் பெய்த பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது நன்னிலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் நிலத்தை கோடை உழவு செய்து நேரடி நெல் விதைப்பு செய்து வருகின்றனர். இந்தநிலையில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மரம் சாய்ந்தது

திருவாரூர் பகுதியில் நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கிய கனமழை இரவு 10 மணி வரை இடைவிடாது கொட்டித்தீர்த்தது. இந்த மழையால் விருப்பாச்சி நடப்பு தெருவில் உள்ள மரம் வேரோடு சாய்ந்தது. அந்த நேரத்தில் சாலையில் யாரும் செல்லாததால் எந்த அசம்பதவிதமும் ஏற்படவில்லை. இருப்பினும் இந்த மரத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மரம் சாய்ந்ததால் அந்த வாகனம் முற்றிலும் சேதம் அடைந்தது. இதே போல பல இடங்களில் மரங்கள் சாய்ந்ததால் தொடர் மின்வெட்டு நிலவி நகரில் பல பகுதிகள் இருளில் மூழ்கியது.


Next Story