கடலூா் மாவட்டத்தில் பலத்த மழை கடல் சீற்றத்தால் மரங்கள் சாய்ந்து விழுந்தன


கடலூா் மாவட்டத்தில் பலத்த மழை  கடல் சீற்றத்தால் மரங்கள் சாய்ந்து விழுந்தன
x
தினத்தந்தி 30 Oct 2022 12:15 AM IST (Updated: 30 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி கடலூர் மாவட்டம் முழுவதும் நேற்று பலத்த மழை பெய்தது. கடல் சீற்றத்தால் மரங்கள் சாய்ந்து விழுந்தன.

கடலூர்

தமிழகத்தில் அக்டோபர் 29-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.அந்த வகையில் கடலூரில் நேற்று முன்தினம் இரவு 11.15 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல கனமழையாக கொட்டியது. இந்த மழை இடைவிடாமல் நள்ளிரவு 2 மணி வரை கொட்டி தீர்த்தது. அதன் பிறகு விடிய விடிய மழை தூறிக்கொண்டே இருந்தது.

இதற்கிடையே நள்ளிரவு நேரத்தில் கடலூர் மாநகரில் மஞ்சக்குப்பம், நேரு நகர், குண்டு உப்பலவாடி, திருப்பாதிரிப்புலியூர் உள்ளிட்ட பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

குளம்போல் தேங்கிய மழைநீர்

இதையடுத்து காலையில் மழை ஓய்ந்திருந்த நிலையில், காலை 8.30 மணி அளவில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை மதியம் 12 மணி வரை விட்டு விட்டு அவ்வப்போது கனமழையாகவும் பெய்தது. இந்த மழையால் சாலைகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கியது. அதனால் கடலூர் மாநகரில் பெரும்பாலான இடங்களில் குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது.

மேலும் காலை முதல் மதியம் வரை பெய்த மழையால் நடைபாதை வியாபாரிகள் மற்றும் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் செயல்படும் உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை வைத்து வியாபாரம் செய்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பலர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் வியாபாரம் செய்ததை காண முடிந்தது. இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதேபோல் குறிஞ்சிப்பாடி, சேத்தியாத்தோப்பு, புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி என மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக கடலூரில் 79.1 மி.மீட்டர் மழையும், குறைந்தபட்சமாக அண்ணாமலை நகரில் 2.6 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

கடல் சீற்றம்

இந்த நிலையில் கடலூர் அடுத்த சுப உப்பலவாடி அருகே கடந்த சில நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மண் அரிப்பு ஏற்பட்டதால் கடற்கரையோரம் இருந்த பனை மரங்கள் மற்றும் ஏராளமான சவுக்கு மரங்கள் சாய்ந்து விழுந்தன. மேலும் கடற்கரையோரம் அமைக்கப்பட்டிருந்த தார் சாலையும் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டது.

தற்போது வங்கக்கடலில் புயல் சின்னம் உருவான காரணத்தினால் வழக்கத்தை விட கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது. மேலும் வழக்கத்தை விட கடற்கரையை தாண்டி அதிக தொலைவு அலை வருவதால், கடலுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் இடையே 400 மீட்டர் தூரம் இடைவெளியே உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


Next Story