கடலூர், விருத்தாசலம் பகுதியில் பலத்த மழை: 500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின விவசாயிகள் கவலை


கடலூர், விருத்தாசலம் பகுதியில் பலத்த மழை:  500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின  விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 19 Oct 2022 6:45 PM GMT (Updated: 19 Oct 2022 6:46 PM GMT)

கடலூர், விருத்தாசலம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதில் பெலாந்துறை அணைக்கட்டில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் 500 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கடலூர்

விருத்தாசலம்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்காத நிலையிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த சுழற்சி பகுதியானது, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளது என்றும், அது மேலும் வலுவடைந்து வருகிற 22-ந் தேதி (அதாவது நாளை மறுநாள்) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது எனவும், அதனால் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி கடலூரில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல இடி-மின்னலுடன் பலத்த மழையாக பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் கொட்டித்தீர்த்தது. மழையின் போது பலத்த காற்றும் வீசியதால், திருப்பாதிரிப்புலியூர், கூத்தப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

இதேபோல் விருத்தாசலம் வானமாதேவி, கீழ்செருவாய், லால்பேட்டை, பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முன்தினம் நள்ளிரவு பலத்த மழை பெய்தது.

தண்ணீர் திறப்பு

இதற்கிடையே பெண்ணாடம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் பெண்ணாடம் அடுத்த பெலாந்துறை அணைக்கட்டு நிரம்பியது. இதையடுத்து பாசன வாய்க்கால் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டதால், திடீரென வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் பாசன வாய்க்கால் சரிவர தூர்வாரப்படாததால், தண்ணீர் வாய்க்காலில் செல்ல வழியின்றி டி.வி. புத்தூர், வண்ணாங்குடிகாடு, ராஜேந்திரபட்டினம் ஆகிய பகுதிகளில் உள்ள விளை நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் விவசாயிகள் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் பயிர்கள் அழுகி மகசூல் பாதிக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

நிவாரணம்

இதுகுறித்து விவசாய சங்க பிரதிநிதி மணிகண்டன் கூறுகையில், பெலாந்துறை பாசன வாய்க்காலை தூர்வாரக்கோரி பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், 500 ஏக்கர் விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி விட்டன. சாதாரண மழைக்கே இந்த நிலை என்றால், பருவமழை காலத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரமே பாதிக்கப்படும் அளவிற்கு அனைத்து பயிர்களும் வெள்ளத்தில் மூழ்கி விடும். அதனால் பாசன வாய்க்காலில் தண்ணீரை திறந்து விடாமல், கருவேப்பிலங்குறிச்சி வெள்ளாற்றில் திறந்து விட வேண்டும். இதற்கு பிறகாவது மாவட்ட கலெக்டரும், பொதுப்பணித் துறையினரும் இந்த வாய்க்காலை முறையாக தூர்வாரி தர வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.


Next Story