அணைப்பகுதிகளில் பலத்த மழை
குமரி மாவட்டத்தில் நேற்று அணைப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அந்த பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்தது.
குலசேகரம்,
குமரி மாவட்டத்தில் நேற்று அணைப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அந்த பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்தது.
பலத்த மழை
குமரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அதே சமயத்தில் மலைப்பகுதிகளில் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று பிற்பகலில் பேச்சிப்பாறை அணையின் நீர்வரத்து மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான மோதிரமலை, கீழ்கோதையாறு, குற்றியாறு, கல்லாறு உள்ளிட்ட பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதே போன்று பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மேலும் திருவட்டார், திற்பரப்பு, மாத்தூர், அருவிக்கரை, மாத்தார், சிதறால், ஆற்றூர், ஏற்றக்கோடு, வீயன்னூர், பூவன்கோடு, களியல், குலசேகரம். திருநந்திக்கரை, பொன்மனை, சுருளக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
வெப்பத்தின் தாக்கம் குறைந்தது
இந்த மழையின் காரணமாக அந்த பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் சற்று தணிந்து காணப்பட்டது. மேலும் வாழை, அன்னாசி உள்ளிட்ட பயிர்களுக்கும் தண்ணீர் கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் மாவட்டத்தின் சில இடங்களில் மழை பெய்தது.